சீமான் pt desk
தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்... கூடுதல் நேர பரப்புரை – சீமான் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு

ஈரோட்டில் நாம் தமிழர் கட்சி பரப்புரைக்கு அனுமதித்த நேரத்தை விட கூடுதல் நேரம் பரபரப்பு மேற்கொண்டதாக பறக்கும்படை அதிகாரி அளித்த புகாரில் சீமான் உள்பட ஐந்து நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

PT WEB

செய்தியாளர்: ரா.மணிகண்டன்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து நெரிக்கல் மேட்டில் நடைபெற்ற பரப்புரை பொதுக்கூட்டத்தில் நேற்று (ஜன 28) சீமான் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: நாதக பிரசாரம்

இந்த நிகழ்விற்காக நாம் தமிழர் கட்சியினர் மாலை 05:30 முதல் 06:30 மணி வரை அனுமதி கேட்டுள்ளனர். காவல்துறையினரும் அதை கொடுத்துள்ளனர். இந்நிலையில் மாலை 06:30 மணிக்கு தொடங்கிய பரப்புரை இரவு 09:15 மணிக்கு நிறைவடைந்துள்ளது. இதனால் தேர்தல் விதிகளை மீறி அனுமதி வழங்கிய நேரத்தை விட கூடுதல் நேரம் பரபரப்பு மேற்கொண்டதாக பறக்கும்படை அதிகாரி நவீன் கருங்கல்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே தேர்தல் விதிகளை மீறியதாக சீமான் மீது நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.