சென்னை ராயப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த முன்னாள் பெண் செய்தி வாசிப்பாளர், தொழிலதிபர் பி.ஆர். சுந்தர் வேலை வாய்ப்பை காரணமாக அறிமுகம் செய்து வீட்டுக்கு அழைத்து அநாகரிகமாக நடந்து கொண்டதுடன், அலுவலகத்தில் மூன்று மணி நேரம் அடைத்து வைத்து பாலியல் துன்புறுத்தியதாக குற்றம்சாட்டியுள்ளார். இதன் அடிப்படையில் சுந்தர் மற்றும் உடந்தையாக இருந்த மனைவி மங்கையர்கரசி மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து பெங்களூரில் இருந்து கைது செய்து சென்னை கொண்டு வந்து விசாரணை நடத்தப்படுகிறது.
செய்தியாளர் : ஐடா அருட்செல்வி
தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய பெண் ஒருவர், ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், வேலை தொடர்பாக பி.ஆர். சுந்தருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், பின்னர் அவர் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று அநாகரிகமாக நடந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது மனைவியிடம் தெரிவித்தபோதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஜூன் 29-ஆம் தேதி நடந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி, கடந்த மாதம் 1-ஆம் தேதி தன்னை அலுவலகத்திற்கு வரவழைத்த பி.ஆர். சுந்தர், சுமார் மூன்று மணி நேரம் அறைக்குள் அடைத்து வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் அந்தப் பெண் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், பி.ஆர். சுந்தர் மீது பாலியல் தொல்லை, பெண் வன்கொடுமை, குற்றவியல் மிரட்டல் உள்ளிட்ட ஐந்து சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவரது மனைவி மங்கையர்கரசியும் இந்தச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். இதையடுத்து, பெங்களூரில் இருந்த இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், பி.ஆர். சுந்தர் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்த புகார் முற்றிலும் பொய்யானது என்றும், நுங்கம்பாக்கத்தில் உள்ள தங்களுக்குச் சொந்தமான குடியிருப்பு தொடர்பான சொத்து தகராறின் பின்னணியில் இந்த வழக்கு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த குடியிருப்பில் வசித்து வரும் காவல்துறை அதிகாரி அன்புச்செழியன், வீட்டை காலி செய்ய மறுத்ததால் சட்ட நடவடிக்கை எடுக்க முயன்ற நிலையில், பழிவாங்கும் நோக்கில் இந்த புகார் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தான் எந்த குற்றமும் செய்யவில்லை என்றும், உண்மை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் பி.ஆர். சுந்தர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளத்திலும் பதிவிட்ட அவர், இந்த விவகாரத்திற்கு அரசியல் காரணம் எதுவும் இல்லை என்றும், இது சொத்து தொடர்பான பிரச்சினையின் தொடர்ச்சியே என்றும் கூறியுள்ளார்.
மறுபுறம், இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கேட்கப்பட்ட காவல் கண்காணிப்பாளர் அன்புச்செழியன், வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும், தனது தரப்பை நீதிமன்றத்தில் சட்டரீதியாக நிரூபிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.