\
தேனியில் காவலரை தாக்கி செயின் பறித்த 5 பேர்
தேனியில் காவலரை தாக்கி செயின் பறித்த 5 பேர்web

’காவலரை தாக்கி செயின் பறித்த 5 பேர்..’ - இரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! 2 சிறார்கள் கைது!

தேனி மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலரை தாக்கி, அவரது கழுத்திலிருந்த தங்கச் செயினை பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on
Summary

தேனி கைலாசப்பட்டி கைலாசநாதர் மலைக்கோவில் அருகே ரோந்து பணியில் இருந்த காவலர் சசிகுமார் மீது இரும்புக் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் 5 பேர் கும்பல் தாக்குதல் நடத்தி தங்கச் செயினை பறித்து தப்பினர். தனிப்படை விசாரணையில், கமுதி பகுதியைச் சேர்ந்த மணிபாரதி மற்றும் 15 வயது இரண்டு சிறார்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் இருவர் தலைமறைவில் உள்ள நிலையில், போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டி பகுதியில் கைலாசநாதர் மலைக்கோவில் உள்ளது. அங்கு தென்கரை காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் சசிகுமார் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது, கோவில் அடிவாரத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இருவரை விசாரிக்க முயன்றபோது, பின்னால் பதுங்கியிருந்த மேலும் மூவர் இரும்புக் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் காவலர் சசிகுமாரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அப்போது காவலர் சசிகுமார் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை பறித்துக்கொண்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

கைலாசபட்டி
கைலாசபட்டி PT

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், தனிப்படை அமைத்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அதில், கமுதி பகுதியைச் சேர்ந்த மணிபாரதி என்ற இளைஞரும், அல்லிநகரைச் சேர்ந்த 15 வயதுடைய இரண்டு சிறார்களும் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்

விசாரணையில், மணிபாரதி ஏற்கனவே திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும், ஆதரவற்ற சிறார்களை பயன்படுத்தி கோவில் உண்டியல் மற்றும் வீடுகளில் கொள்ளையடிக்கும் திட்டத்தில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், கைலாசநாதர் மலைக்கோவிலின் உண்டியலை உடைத்து திருடிய சில்லறைப் பணத்துடன் இருந்தபோதே, ரோந்து வந்த காவலரின் கண்களில் சிக்கியதாகவும், அதிலிருந்து தப்பிக்கவே காவலரை தாக்கி செயினை பறித்துச் சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

கைலாசபட்டி
கைலாசபட்டி PT

இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் இருவர் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். பொதுமக்கள் பாதுகாப்பிற்காக இரவு நேர காவல் பணியில் இருந்த காவலரையே கும்பல் ஒன்றோ தாக்கி நகையை பிரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் - ராஜ்குமார்.ர

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com