சடன் பிரேக்கால் ஒரு வயது குழந்தை பேருந்துக்கு வெளியே விழும் காட்சி முகநூல்
தமிழ்நாடு

வேகமாக சென்ற பேருந்தில் சடன் பிரேக்.. தவறி விழுந்த ஒரு வயது குழந்தை.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சி.!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வேகமாக சென்ற பேருந்து திடீரென நிறுத்தப்பட்டதால், இளம் பெண்ணின் கையில் இருந்த ஒரு வயது குழந்தை பேருந்துக்கு வெளியே சாலையில் விழுந்த பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முத்துலிங்கபுரத்தை சேர்ந்த மதன் குமார் தனது சகோதரி மற்றும் சகோதரியின் இரண்டரை வயது மற்றும் ஒரு வயது கைக்குழந்தையை அழைத்துக் கொண்டு மதுரையிலிருந்து தனியார் பேருந்து மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து கொண்டிருந்தார்.

பேருந்தின் முன்பக்க படிக்கட்டு அருகே உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த மதன் குமார் மடியில் இரண்டரை வயது குழந்தையும், ஒரு வயது குழந்தை சகோதரியின் மடியிலும் அமர்ந்திருந்தது. மீனாட்சிபுரம் விலக்கு அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென ஓட்டுனர் சடன் பிரேக் போட்டுள்ளார்.

அப்போது நிலை தடுமாறிய மதன் குமார் இரண்டரை வயது குழந்தையுடன் பேருந்துக்குள் விழுந்தார். அதே நேரத்தில் அவரது சகோதரியின் கையில் இருந்த ஒரு வயது குழந்தை கையில் இருந்து தவறி பேருந்துக்கு வெளியே விழுந்தது. இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் சாலையில் விழுந்த குழந்தையை உடனடியாக மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர். குழந்தைகள் இருவரும் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

ஆனால் மதன் குமார் தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டது. மதன் குமார் மற்றும் குழந்தை தவறி விழும் பதைபதைக்கும் காட்சி பேருந்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

படக் காட்சிகள் : பேருந்தில் இருந்து குழந்தை தவறி விழும் காட்சி‌‌.