அலங்காநல்லூரில் வாடிவாசல் முன்பு காளை உரிமையாளர்கள் நடத்திய போராட்டம், அமைச்சர் உடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு வாபஸ் பெறப்பட்டது.
அலங்காநல்லூர், வலசை, ஒத்தவீடு மற்றும் குறவன் குளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த காளைகளுக்கு, 900த்திற்கு மேற்பட்ட எண்களில் டோக்கன் வழங்கப்பட்டது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில், அதிகபட்சமாக 800 காளைகளை மட்டுமே அவிழ்த்து முடியும் என்றும், இதனால் தங்கள் கிராமங்களைச் சேர்ந்த காளைகள் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் உள்ளூர் மக்கள் கூறினர்.
காளைகளுக்கு டோக்கன் வழங்குவதிலும் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி அவர்கள் வாடிவாசல் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தங்கள் காளைகளுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்று சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நீடித்த நிலையில், அவர்களுடன் அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் அரவிந்த் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆவணங்கள் சரியாக இருக்கும்பட்சத்தில் விதிமுறைகளுக்கு உட்பட்டு காளைகள் அவிழ்த்துவிடப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட காளை உரிமையாளர்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர்.