செய்தியாளர்: ராஜிவ்
திருத்தணி சிறுவன் கடத்தல் வழக்கில் தொடர்புடைய கூடுதல் டி.ஜி.பி ஜெயராமை கைதுசெய்ய பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நேற்றைய விசாரணை முடிவில் கூடுதல் டி.ஜி.பி ஜெயராமை இடைநீக்கம் செய்யப்பட்டதற்கான விளக்கத்தை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நிலையில், நீதிமன்றத்தில் இடைநீக்கம் செய்த ஆவணங்களை தாக்கல் செய்தது தமிழ்நாடு அரசு.
இதையடுத்து நீதிபதிகள், இன்று விசாரணையின் தொடக்கத்தில் இடைநீக்கம் தொடர்பாக என்ன முடிவு எடுக்கப்பட்டது என கேள்வி எழுப்பினர். அதற்க்கு தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போது நிலையில், பணியிடை நீக்கத்தை திரும்பப் பெறப் போவதில்லை. அது தொடரும். வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் பணியிடை நீக்கம் தொடர வேண்டும் எனவும் கிரிமினல் வழக்கு நிலுவையில் இருக்கும் போது இடைநீக்கத்தை ரத்து செய்ய முடியாது. வழக்கில் இவருக்கு சம்மந்தம் இருப்பதாக கருதுவதால் தற்போதைய நிலையில் இடை நீக்த்தை ரத்து செய்ய முடியாது என வாதிடப்பட்டது.
இதை அடுத்து நீதிபதிகள், இது தொடர்பான வழக்கை ஏதேனும் சிறப்பு விசாரணை பிரிவுக்கு மாற்ற முடியுமா? என கேட்டு விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள். மேலும் இந்த வழக்கை உயர் நீதிமன்றத்தில் வேறு நீதிபதி முன்பு விசாரணைக்கு பட்டியலிடலாம் என கருதுவதாகக் கூறி விசாரணையை சிறிது நேரத்திற்கு ஒத்திவைத்தார். மீண்டும் வழக்கின் விசாரணை தொடங்கிய போது தமிழக அரசு, கூடுதல் டி.ஜி.பி தொடர்புடைய வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றலாம் என தெரிவித்தது. மேலும் எந்தெந்த வழக்குகள் என்பதைக் கூற விரும்பவில்லை. ஆனால், பல்வேறு வழங்குகளில் விசாரணையை எடுத்து, சில உத்தரவுகளை பிறப்பித்து நாங்கள் இவ்வாறுதான் செயல்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் கட்டாயப்படுவது போல உள்ளது என வாதிட்டது.
இதற்கிடையில் ஏ.டி.ஜி.பி ஜெயராம் தரப்பு, பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். இது முறையான நடவடிக்கை அல்ல என வாதாடினார். இருதரப்பு வாதங்களை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், சிறுவர் கடத்தல் விவகாரம், கூடுதல் டி.ஜி.பி ஜெயராம் தொடர்புடைய வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற உத்தரவிட்டதோடு சிறுவன் கடத்தல் விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அறிவுறுத்தல் வழங்கினர்.