நயினார் நாகேந்திரன், ஓபிஎஸ் முகநூல்
தமிழ்நாடு

சமாதானப்படுத்த முயற்சிக்கிறதா பாஜக.. நயினார் நாகேந்திரன் பேச்சும், ஓபிஎஸ் தரப்பு கொடுத்த பதிலும்!

ஓபிஎஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கின்ற நிலையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் என்னிடம் கூறி இருந்தால் நான் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன் என்று கூறியதற்கு, ஓபிஎஸ் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

PT WEB

ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெற்றிருந்த நேரத்தில் தன்னுடைய அரசியல் வாழ்க்கையின் உச்சநிலையில் இருந்தார் ஓ.பன்னீர்செல்வம். மூன்று முறை முதலமைச்சர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி என அதிமுகவில் நிலையான தலைவர்கள் வரிசையில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக மங்கத் தொடங்கி தற்போது வீழ்ச்சியின் இறுதிநிலையை எட்டியிருக்கிறது. அதிமுகவில் இரட்டை தலைமையில் ஒருங்கிணைப்பாளர் ஆக இருந்து பின்னர் அங்கிருந்து ஓரங்கப்பட்டு வெளியேறி அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை உருவாக்கினார். பாஜக உடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டு தோல்வியும் தழுவினார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட பின்னர் முக்கிய முடிவை எடுத்துள்ளார்.

OPS

ஓ பன்னீர்செல்வம் நேற்று ஆழ்வார்ப்பேட்டையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அறிவித்த கையோடு முதலமைச்சர் ஸ்டாலினை அவரின் இல்லத்தில் சென்று சந்தித்தார். மு.க.முத்துவின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்க என்று அவர் சொன்னாலு, இந்த சந்திப்பு தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அவர் திமுக வின் கூட்டணியில் கூட்டணில் இணையப்போகிறாரா.. என்ற கேள்வியையும் எழுப்பியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பிற்கு பிறகு வெளியே வந்த ஓ. பன்னீசெல்வத்திடம், நீங்கள் திமுக கூட்டணியில் இணையப்போகிறீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு “அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை” அதனால் பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறியிருந்தார். இந்த பதிலும் பல ஐயங்களுக்கு வித்திட்டது.

இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியது குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது, “என்னிடம் கேட்டு இருந்தால் நானே பிரதமரை பார்க்க ஏற்பாடு செய்திருப்பேன். நான் அவரிடம் சட்டமன்றத்தில் பார்க்கும்போதும் சரி, ஏற்கனவே தொலைபேசியில் பேசிக்கொண்டே தான் இருந்தேன். அவரிடம் வெளியேறும் முடிவை எடுக்க வேண்டாம் என்பதையும் கேட்டுக்கொணடேன். பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தது சொந்த பிரச்சனைக்காக கூட இருக்கலாம். அவர் தரப்பில் இருந்து பிரதமரை சந்திக்க கேட்டால் நிச்சயம் அவருக்கு சந்திப்பை ஏற்பாடுத்தி தருவோம்” இவ்வாறு பேசினார்.

நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு பதிலளித்துள்ள ஓபிஎஸ் ஆதரவாளர் சுப்புரத்தினம் கூறியதாவது,

“பிரதமரை சந்திக்கும் விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உண்மையை மறைக்கிறார். அவருக்கு தெரிந்தே பன்னீர்செல்வம் பிரதமருக்கு கடிதம் எழுத்தினார். பிரதமர் வருவதற்கு 3 நாள் முன்பே எழுதிய கடிதத்திற்கு எந்த பதிலும் வரவில்லை என்பதால் 6 முறை எங்கள் தரப்பில் இருந்து தொலைபேசியில் அழைத்தோம் ஆனால், அவர் தொலைபேசியை எடுக்கவில்லை.

நயினார் நாகேந்திரன்

இதனால் ஓபிஎஸ் அவர்களே குறுஞ்செய்தி அனுப்பியும் அதற்கும் பதிலளிக்கவில்லை. இவ்வாறு இருக்கையில் தொடர்ந்து இவ்வாறு நயினார் நாகேந்திரன் பேசி வருவது, குதிரையில் இருந்து கீழே தள்ளிவிடுவது மட்டுமல்ல குழியை தோண்டுவதாக இருக்கிறது” என்று கூறினார்.

அதிமுகவில் இருந்து வெளியேறியவர்கள் மற்றும் வெளியேற்றப்பட்டவர்களில் தற்போது டிடிவி தினகரன் மட்டுமே தேசிய ஜனநாயக கூட்டணி இடம்பெற்றிருக்கிறார். கே.சி.பழனிசாமி, புகழேந்தி உள்ளிட்ட பலரும் எந்தக் கட்சியிலும் சேராமல் தனித்தே இயங்கி வருகிறார்கள். கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும் என்று செயல்பட்டு வருகிறார்கள். அதிமுகவில் இருந்து பிரிந்து உள்ளவர்கள் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்றே இதற்கு முன்பு பாஜக கூறிவந்தது. ஆனால், சமீபத்திய அதிமுக உடனான கூட்டணிக்கு பிறகு இபிஎஸ் அழுத்தம் காரணமாக பாஜக அந்த முயற்சிகளை கைவிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், ஓபிஎஸ்-ஐ சமாதானப்படுத்த பாஜக முயற்சி செய்வதாக கூறப்படும் நிலையில், அது சாத்தியமாகுமா என்பது பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

முன்னதாக நேற்று அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த புகழேந்தி பேசும் போது, “மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு பன்னீர் செல்வம் என்ற தலைவரை இனி அசிங்படுத்த முடியாத என்ற அளவிற்கு அசிங்கப்படுத்தி விட்டார்கள், அதனால் தான் நாங்கள் இந்த கூட்டணியில் இருந்து வெளியேறினோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியது சரியான முடிவு.

புகழேந்தி

ஆனால், நாளையே பிரதமர் கூப்பிட்டார். அமித் ஷா கூப்பிட்டார் என போய் விடாமல் இருந்தால் அவருக்கு நல்லது. ஓ பன்னீர் செல்வம் கூட்டணியில் இருந்து வெளியேறிய உடன் பாஜக பின்னடைவை சந்தித்து உள்ளது. கண்டிப்பாக எடப்பாடி பாஜக விற்கும் துரோகம் செய்வார். பாஜக ICU வில் உள்ளது” என்று கூறியிருந்தார். இது ஓபிஎஸ் உறுதியான நிலைப்பாட்டில் இருக்கமாட்டார் என்பதையே காட்டுகிறது.