எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், அமித் ஷா pt web
தமிழ்நாடு

முக்கிய ஆலோசனையில் பாஜக தேசிய தலைமை.. என்ன நடக்கிறது பாஜக கூட்டணியில்?

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழக அரசியல் குறித்து முக்கிய ஆலோசனையை மேற்கொண்டு வருகிறது பாஜக தேசிய தலைமை..

PT WEB

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழக அரசியல் குறித்து முக்கிய ஆலோசனையை மேற்கொண்டு வருகிறது பாஜக தேசிய தலைமை.. எண்டிஏ கூட்டணியில் இருந்து ஓபிஎஸ், டிடிவி என்று அடுத்தடுத்த முகங்கள் கழன்று சென்ற நிலையில், தமிழக பாஜக கூட்டணியில் என்ன நடக்கிறது என்று டெல்லி தலைமை கவனம் செலுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக பாஜக தலைவர்கள் அனைவரும் டெல்லி விரைந்துள்ள நிலையில், நடப்பவை குறித்து விரிவாக பார்க்கலாம்.

மும்முரம் காட்டும் இருகட்சிகளின் தலைவர்கள்

பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி வைத்த கோரிக்கைகள் என்ன

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத கால இடைவெளியே இருக்கிறது. இந்த நேரத்தில், பாஜக - அதிமுக அடங்கிய எண்டிஏ கூட்டணியை வலுப்படுத்த இருகட்சிகளின் தலைவர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர். எனினும், பாஜகவுடன் ஏற்பட்ட மனக்கசப்பில், டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரும் எண்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தனர். அதிலும், எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு கூட்டணிக்குள் வரமாட்டோம் என்று கூறிவிட்டார் டிடிவி. அதோடு, கூட்டணியில் இருந்து வெளியேற, நயினாரின் மனநிலையும் செயல்பாடுமே காரணம் என்று கூறினார்.

இப்படியாக, தமிழகத்தில் எண்டிஏ கூட்டணியில் குழப்பங்கள் நடந்து வரும் நிலையில்தான், தமிழக பாஜக தலைவர்களை டெல்லிக்கு அழைத்துள்ளது தேசிய தலைமை. தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முன்னாள் மாநில தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்‌, வானதி சீனிவாசன் மற்றும் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் அனைவரும் டெல்லி சென்றுள்ளனர். இன்று காலை நடைபெற்ற குடியரசு துணை தலைவர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்ட நிலையில், தற்போது நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், மத்திய இணை அமைச்சர்கள் எல்.முருகன் இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

ஓ. பன்னீர்செல்வம், தினகரன், செங்கோட்டையன்

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் விலகல், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ஜே.பி.நட்டாவை‌ நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்புகளில், அதிமுகவை ஒருங்கிணைப்பது.. டிடிவி மற்றும் ஓபிஎஸ் ஆகியோரை சமாதானப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள்.