செய்தியாளர்: சுதீஷ்
கோவை உடையாம்பாளையம் பகுதியில் ஒரு தம்பதி, பீஃப் பிரியாணி, சில்லி பீஃப் போன்ற உணவுகளை தள்ளுவண்டி கடை மூலம் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், அவர்களிடம் வாக்குவாதம் செய்த பாஜக நிர்வாகி ஒருவர், இங்கு ஃபீப் கடை போடக்கூடாது என்று பேசியுள்ளார். மேலும், ‘யாரை வேண்டுமானாலும் கூட்டிட்டு வாங்க.. இது ஊர்க் கட்டுப்பாடு’ என்று அவர் கூற, தம்பதியினரும் பதிலுக்கு வாக்குவாதம் செய்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில், நடந்தது பற்றி நம்மிடம் பேசிய தம்பதி, “எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அந்நபர் மிரட்டல் விடுப்பதால் அச்சம் ஏற்படுகிறது. இதே பகுதியில் சிக்கன், மீன் உள்ளிட்ட அசைவ உணவுகள் விற்கப்படுகின்றன. ஆனால் அது அவர்களுக்கு பிரச்னையாக இல்லை. எங்களை மட்டும் மிரட்டுகின்றனர்” என வேதனை தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி சுப்ரமணியிடம் கேட்டபோது, “இதை நானாக சொல்லவில்லை. பீஃப் கடை போடக்கூடாது என்பது ஊர் கட்டுப்பாடு. கோவில், பள்ளிக்கூடம் பக்கத்திலேயே பீஃப் கடை போடுவதுதான் பிரச்னை. அங்கு இருக்கும் மற்ற மாமிச கடைகளையும் எடுக்குமாறு கூறியுள்ளோம். சைவ சாப்பாடு என்றால் பிரச்னையே இல்லையே” என்று கூறியுள்ளார்.
உணவு விற்பனையாளர்களை பாஜக நிர்வாகி சுப்பிரமணி மிரட்டிய வீடியோ வைரலாகி கடும் கண்டனங்களை பெற்றுவந்த நிலையில், தன் செயலில் எந்தவித குற்றமும் இல்லையென்ற தொணியில் அவர் தற்போது பேசியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.