சுப்பிரமணியன் சுவாமி, பிரதமர் மோடி
சுப்பிரமணியன் சுவாமி, பிரதமர் மோடி pt web
தமிழ்நாடு

"கச்சத்தீவு; தமிழக மீனவர் பிரச்னைக்கு பாஜகவே காரணம்" - வரலாற்றை விளக்கும் பத்திரிகையாளர் அய்யநாதன்!

Angeshwar G

கச்சத்தீவின் வரலாறு

இந்தியாவின் தமிழ்நாட்டிற்கும் இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கும் இடையே இருக்கிறது பாக் ஜலசந்தி ( Palk Strait). 1755ல் இருந்து 1763 ஆம் ஆண்டுவரை சென்னை மாகாணத்தின் ஆளுநராக இருந்த ராபர்ட் பாக் என்பவரது பெயர் தான் ஜலசந்தியின் பெயராக சூட்டப்பட்டுள்ளது. இந்த நீர்ப்பரப்பில், தமிழ்நாட்டின் பாம்பனுக்கும், இலங்கையில் டெல்த் தீவிற்கும் இடையே இருக்கும் சிறிய தீவு தான் கச்சத்தீவு.

மிகச்சிறியத்தீவு. ராமேஸ்வரத்தில் இருந்து 11 கடல்மைல் தொலைவிலும், இலங்கையில் இருந்து 12 கடல்மைல் தொலைவில் அமைந்துள்ள மிகச்சிறிய தீவு. மொத்தமாகவே 285 ஏக்கர் பரப்பளவு கொண்டதே கச்சத்தீவு. ஏறத்தாழ ஒரு மைல் நீளம், 900 அடிகள் அகலம். 1600 ஆம் ஆண்டுகளிலேயே அப்போது மதுரையை ஆண்ட நாயக்கர் மன்னர்களின் வசம் இருந்த இந்த தீவு, பின்னர் சேதுபதி மன்னர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன்பின்னர் சுதந்திரம் அடையும் வரை அப்பகுதி சேதுபதி மன்னர்களது வசம்தான் இருந்துள்ளது. பின்னர் ராமநாதபுரம் மாவட்டம் உருவான பின்னர் மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிற்கு வந்தது. சேதுபதியின் அரசுக்கு கச்சத்தீவு என்பது வருவாய் தரும் பகுதி. கச்சத்தீவு தொடர்ச்சியாக பலருக்கும் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது; அதில் ஆங்கிலேயர்களும் அடக்கம். கச்சத்தீவில் விளைந்த உமிரி, சாயாவேர் போன்ற செடிகளை ராமநாதபுரத்து மக்கள் மருந்தாகவும் பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்தியாவிற்கு சொந்தமானதே கச்சத்தீவு

தற்போதைய இந்தியா, பிரிட்டிஷின் காலணி நாடாக இருந்தபோது, பிரிட்டிஷ் அரசின் கப்பற்படைகள் தங்களது சோதனைகளை மேற்கொள்ளும் இடமாக கச்சத்தீவு இருந்துள்ளது. சுமார் 1700 ஆம் ஆண்டுகளில் இருந்து சுதந்திரம் அடைவதற்கு முந்தைய காலக்கட்டம் வரை, பலராலும் ஆய்வு செய்து வரையப்பட்ட இந்திய வரைபடங்களில் கச்சத்தீவும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் மிக முக்கியமானது என்னவெனில், இலங்கையிலும் பல டச்சு, பிரெஞ்சு, ஆங்கிலேயர்கள் உள்ளிட்ட பல வரலாற்று ஆய்வாளர்களும், இலங்கைக்கான வரைபடத்தை தயாரித்துள்ளனர். அந்த வரைபடங்களில் கச்சத்தீவு இடம்பெறாததும் குறிப்பிடத்தக்கது. ஒரே ஒரு வரைபடத்தில் மட்டும் கச்சத்தீவு யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதி என குறிப்பிடப்பட்டுள்ளதும், அந்த ஆண்டில் யாழ்ப்பாணமும் சென்னையில் இருந்த பிரிட்டிஷ் அரசின் கீழ் இருந்ததால், அப்படி குறிக்கப்பட்டுள்ளதாக அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பின், 1955 ஆம் ஆண்டுவாக்கில் இலங்கை அரசு கச்சத்தீவை தனது கடற்படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் இடமாக பயன்படுத்தியது. அப்போதே இந்திய தேசம் முழுவதும் அதற்கான எதிர்ப்பலைகள் கிளம்பின. இந்திய அரசும் இலங்கையின் செயலைக் கண்டித்தது.

கச்சத்தீவு ஏன் முக்கியம்?

1955லேயே கச்சத்தீவை இலங்கை சொந்தம் கொண்டாடுவதற்கான காரணம் என்ன? ஏன் அந்த ஒரு சிறிய தீவிற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. காரணம் மிகச்சிறியது. ஆயுதப் பயிற்சிக்கும், தனது நாட்டின் பாதுகாப்பிற்கு ஏதுவான அரண் அமைக்கவும் அப்பகுதி பயன்படும் என்பதாலும்தான். கச்சத்தீவு அமைந்துள்ள பகுதி மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. கப்பல் படைக்கும் நீர்மூழ்கி கப்பற்படைக்கும் பயிற்சிக்களமாகவும், நீர்மூழ்கிக் கப்பல், போர்க்கப்பல்களை செப்பனிட ஏதுவான இடமாக இருக்கும் என கூறப்படுகிறது. போர்விமானங்கள் தற்காலிகமாக தரையிறங்குவதற்கு தோதான ஒருபகுதி. தமிழர்களுக்கோ இன்னும் மிகச் சிறிய காரணமே போதும். உயிருக்கு பயம் இல்லாமல்சென்று மீன் பிடித்துவிட்டு வரலாம். கச்சத்தீவு இலங்கை வசம் சென்றதில் இருந்து தூக்கத்தைத் தொலைத்த மீனவர்கள் பலர். நாள்தோறும் மீனவர்கள், படகுகள் பிடிபடுவதும், மீனவர்கள் கைதாவதும் கொலை செய்யப்படுவதும், வலைகள் அறுபடுவதும் தொடர்கதையாகி வருகின்றன.

இதன்பின்பு 1973 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இலங்கை பயணம் மேற்கொள்கிறார். அதற்கு அடுத்த ஆண்டு, இலங்கை அதிபர் சிறிமாவோ பண்டாரநாயக இந்தியாவிற்கு வருகிறார். அதே, 1974 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி, ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. ஒப்பந்தத்தின்படி, கச்சத்தீவு இருக்கும் பகுதி இலங்கை வசம் செல்கிறது. ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் முன்பே தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதி, மத்திய அரசுக்கு தனது கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்கிறார். தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடத்தப்பட்டது. ஆனால், கச்சத்தீவு இலங்கை வசம் சென்றது.

அண்ணாமலை வெளியிட்ட ஆர்.டி.ஐ தகவல்

இதனை அடுத்து ஒவ்வொரு தேர்தலிலும் கச்சத்தீவு குறித்து திமுக, காங்கிரஸ் க்கு எதிரான கட்சிகள் குற்றம் சாட்டுவதும், கட்சத்தீவை மீட்போம் என அனைத்து கட்சிகளும் சவால் விடுவதும் தொடர்கதையானது. இந்நிலையில் மீண்டும் கச்சத்தீவு விவகாரம் தலைதூக்கியுள்ளது. அண்ணாமலை ஆர்.டி.ஐ மூலம் சில தகவல்களை பெற்று வெளியிட, அகில இந்திய பாஜக தலைவர்கள் ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் கட்சிக்கும், திமுகவிற்கும் எதிராக களமிறங்கினர்.

இந்நிலையில் மூத்த பத்திரிக்கையாளர் அய்யநாதனிடம் பாஜகவின் குற்றச்ச்சாட்டு குறித்து கேள்விகளை முன்வைத்தோம்., அவர் கூறியதாவது, “தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை, கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்ததன் மூலம் நாம் இழந்துவிட்டோம் என்பதுதான் இந்தியா இலங்கை இடையே 1974ல் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் பாதிப்பாக பார்க்க வேண்டி இருக்கிறது.

ஆனால், பிரதமர் மோடி, அண்ணாமலை, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் போன்றோர் இதை அரசியல் ஆக்குகிறார்கள். அன்று இருந்த தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியின் ஒப்புதலோடுதான் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தார்கள் என கூறுகிறார்கள்.

மூத்த பத்திரிக்கையாளர் அய்யநாதன் சொல்வதென்ன?

ஒரு அயலகத்துறை அமைச்சராக இருப்பவர் உண்மையைப் பேசி இருக்க வேண்டும். முதல் உண்மை, இந்திய ஒன்றிய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான ஒப்பந்தம் கச்சத்தீவு தொடர்பான ஒப்பந்தம் அல்ல. மாறாக, அது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே, பாக் நீரினைப் பகுதியில், இரு நாடுகளுக்கு இடையே சர்வதேச எல்லையை வரைந்து ஏற்றுக்கொள்வதற்கான ஒரு ஒப்பந்தமாகும்.

மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன்

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையேயான கடற்பகுதியில் ஐந்து இடங்களைத் தேர்ந்தெடுத்து, சமதூரத்தில் ஐந்து புள்ளிகளை வைத்து, அதை ஒரு கோடாக்கி அதுவே இருநாடுகளுக்கும் இடையேயான எல்லைக்கோடு என ஒப்பந்தத்தை உருவாக்கினார்கள். அந்த எல்லைக்கோட்டில் கச்சத்தீவு இலங்கை வசம் சென்றுவிட்டது. இது கச்சத்தீவை அளிப்பதற்கான ஒப்பந்தம் அல்ல, இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைக்கோட்டை போடுவதற்கான ஒப்பந்தம். ஆனால், கச்சத்தீவை எடுத்து இலங்கைக்கு கொடுப்பதற்குத்தான் இந்த ஒப்பந்தம் போடப்பட்டதுபோல் அண்ணாமலையும் மோடியும் பேசுவது உண்மையை மறைப்பதும் திசைதிருப்புவதற்குமான செயல்.

“கடந்த 20 ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் 6,184 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களது 1175 படகுகள் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு வீணாகிவிட்டது” என சொல்கிறார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர். இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக சொல்லப்பட்டு, 840 மீனவர்கள் கொல்லப்பட்டதை ஏன் அவர் மறைத்தார். உண்மையாகவே மீனவர்களது வாழ்க்கையில் அக்கறை இருந்தால் கொல்லப்பட்டதையும் சொல்லி இருக்க வேண்டுமே.

படகுகள் பிடிபட பாஜக தலைவரே காரணம்

நான் கேட்பது என்னவெனில், படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்வது, அதை வீணடிப்பது என்பதை எப்போதில் இருந்து நடைமுறைப்படுத்தப்படுகிறது?. பாஜக ஆட்சியிக்கு வந்தபின், பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணிய சுவாமி இலங்கை அதிபரைச் சந்தித்து, “எல்லைத் தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களை விடுவித்துவிடுங்கள்; அவர்களுடைய படகுகளை பறித்துவைத்துக்கொள்ளுங்கள்” என்று சொன்ன ஆலோசனையை ஏற்றுதானே இந்த நடவடிக்கை தொடங்கியது. இந்திய பிரதமர் மோடியும், அயலக அமைச்சர் ஜெய்சங்கரும் ஏன் அதை தடுக்கவில்லை; கண்டிக்கவில்லை. அவர்களால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் எல்லாம் வீணாகிவிட்டதே, அவர்களுக்கு இந்திய ஒன்றிய அரசு எப்போதாவது இழப்பீடு கொடுத்துள்ளதா?

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் - கச்சத்தீவு

எல்லை தாண்டி மீன்பிடிக்கும் மீனவர்களை கைது செய்யவோ, அவர்களது வலையை அறுக்கவோ, மீன்களை பறித்துக்கொள்ளவோ எந்த சர்வதேச சட்டம் இடம் தருகிறது. ஐநாவின் சர்வதேச கடல்சார் சட்டத்தின்படி, ‘எங்கே மீன்கள் கிடைக்கின்றதோ அதை நோக்கி மீனவர்கள் செல்வார்கள். எனவே மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பது என்பது நிலத்தில் எல்லையைத் தாண்டுவது அல்ல. கடற்பரப்பில் எல்லையைத் தெரியாமல்தான் மீனவர்கள் கடப்பார்கள். அப்படி கடக்கும் மீனவர்களை எச்சரித்து அனுப்ப வேண்டுமே தவிர, வலைகளை, மீன்களை, படகுகளைக் கைப்பற்றுவதோ, மீனவர்களை துன்புறுத்துவதோ கூடாது’ என சொல்லியுள்ளது. ஆனால், அதையே இலங்கை அரசு தொடர்ச்சியாக செய்துவரும்போது, அதை மன்மோகன் சிங், வாஜ்பாயி, மோடி என எந்த அரசாங்கமாக இருந்தாலும் ஏன் அதை கண்டிக்கவில்லை? இலங்கை அரசுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்?

boat

இந்திய அணி 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றபோது, கடற்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 4 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை வெட்டிக் கொன்றபோது ஏன் இந்திய ஒன்றிய அரசு கண்டத்தைக் கூட தெரிவிக்கவில்லை.

கச்சத்தீவுதான் இரு நாடுகளுக்கு இடையிலான (மீனவர்களின்) பிரச்சனை என்றால், அதை ஏன் மீட்போம் என பாஜக சொல்லவில்லை. கட்சத்தீவை மீட்போம் என சுஷ்மா சுவராஜ் சொன்னபோது, அது தொடர்பான ஆவணத்தை நான் தயாரித்தேன். அதை பாஜக தலைவர்கள் இல கணேசன் போன்றோர் கொண்டு சென்று அவரிடம்(சுஷ்மா) கொடுத்தனர் அதை நிறைவேற்றிவிடலாம் என்று சுஷ்மா சுவராஜ் சொன்ன ஒரேநாளில், அது முடிவடைந்த விஷயம் விஷயம். அதில் ஒன்றும் செய்ய முடியாது என தனது அமைச்சகம் சொல்வதாக பதில்கூறினார். அவ்வாறு மோடி அரசே சொன்னபிறகு மீண்டும் இப்பிரச்சனையை எழுப்புவது அரசியல் லாபத்திற்கா அல்லது மீண்டும் இப்பிரச்சனையை எழுப்புவதற்கா? மீனவர்களை மீட்பதுதான் உங்களது குறிக்கோள் என்றால், உங்களது கட்சியின் தமிழ்நாட்டுக்கிளை மேற்கொண்ட முயற்சிக்கு ஏன் முற்றுப்புள்ளி வைத்தீர்கள்.

அண்ணாமலை

எனவே அண்ணாமலை, மோடி, ஜெய்சங்கர் சொல்வது அரசியல். அக்கறை அல்ல. இது தமிழ்நாட்டு மக்களுக்கும் மீனவர்களுக்கும் நன்றாகவே தெரியும்..” என்றார்.