சென்னை மேற்குமாம்பலத்தில் உள்ள கோசாலையில், சமீபத்தில் நடந்த மாட்டுப்பொங்கல் விழாவில் பேசிய ஐஐடி இயக்குநர் காமகோடி, கோமியம் குடித்தால் காய்ச்சல் சரியாகும் என கூறினார். அவரது இந்த பேச்சு கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், போலி அறிவியலை ஊக்குவிக்கும் வகையில் பேசிய ஐஐடி இயக்குநர், அந்த பதவிக்கு மிகவும் பொருத்தமற்றவர் என கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதேபோல், அறிவியலுக்கு புறம்பான கருத்தைப் பேசிய ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடிக்கு ”தனது பேச்சுக்கான ஆதாரத்தை அவர் வெளியிட வேண்டும். இல்லையென்றால், அறிவியல்படி தவறு என்று பொதுவெளியில் வருத்தம் தெரிவிக்க வேண்டும்” என தமிழ்நாடு மாணவர் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அமைச்சர் பொன்முடியும் ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடியை விமர்சித்திருக்கும் நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை “ஐஐடி இயக்குநர் பேசியதை அரசியலாக்காதீர்கள்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு திருமண நிகழ்ச்சிக்காக வருகை தந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், “சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி இந்தியாவில் அவருடைய துறையில் பெரிய நிபுணர். அவருக்கு அவர் சார்ந்த இருக்கக்கூடிய மதத்தின் மீது பற்று இருக்கிறது, அதில் தவறு கிடையாது.
மார்கழி மாதத்தில் பாராயணம் பாடுவது தவறு கிடையாது. பசுமாட்டின் மீது நம்பிக்கை இருக்கிறது தவறு கிடையாது, அது அவருடைய கோட்பாடு.
அவர் வகுப்பறைக்குள் சென்று பாடம் எடுத்து நீங்க குடிங்க என்று சொல்வது கிடையாது, அவருடைய தனிப்பட்ட நிலைப்பாடு அதை குறை கூறக்கூடாது. ஒரு கருத்தை மட்டும் பிரதானப்படுத்தி அதை அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் அவரைப் பற்றி தெரியும் அவருடைய சாதனையை தெரியும், Al தொழில்நுட்பத்தில் சிறந்த பேராசிரியராக இருந்து வருகிறார்” என்று பேசினார்.