அதிமுக கூட்டணியில் 56 தொகுதிகளைபாஜக கேட்பதாக தகவல் வெளியான நிலையில், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமியை, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்துப் பேசியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இத்தேர்தல் களத்தில், இதுவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக மற்றும் நாதக ஆகிய கட்சிகளிடையே நான்குமுனைப் போட்டி நிலவிவருகிறது. மேலும், கூட்டணிப் பேச்சு வார்த்தை, அடுத்தடுத்த மக்கள் சந்திப்புகள், கட்சித் தலைவர்கள் சந்திப்பு மற்றும் தொகுதிப்பங்கீடு என அடுத்தடுத்து பரபரப்பான சம்பவங்களுடன் தமிழக அரசியல் களம் சென்று கொண்டிருக்கிறது. அதன்படி, சமீபத்தில் அமித் ஷா-வின் தமிழக வருகைக்குப் பின் அதிமுக கூட்டணியில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அடுத்தடுத்த கூட்டணி நகர்வுகள் வேகமெடுத்து இருக்கிறது. அதன்படி நேற்று முன்தினம், அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்தது அன்புமணி தரப்பு பாமக. இது, அதிமுக கூட்டணிக்கு வலுசேர்ப்பதாக பார்க்கப்பட்டது. இதையடுத்து, அன்றைய தினமே, டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி அமித் ஷா-வை சந்தித்துப் பேசினார். அப்போது, பாஜகவின் தொகுதிப் பங்கீடு குறித்தும், அதிகாரத்தில் பங்கு குறித்தும் பேசப்பட்டதாக தகவல் வெளியானது.
குறிப்பாக, டெல்லி சென்ற கே.பழனிசாமியிடம் 56 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று அமித் ஷா வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், அதிமுகவின் உயிர்நாடியாக கருதப்படும் கொங்கு மண்டலத்தில் உள்ள தொகுதிகளை பாஜக குறிவைப்பதாகவும், அமைச்சரவையிலும் இடம்கேட்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் 20 இடங்கள் மட்டுமே பாஜகவுக்கு வழங்கப்பட்ட நிலையில், தற்போது 3 மடங்கு கூடுதல் இடங்களைக் கேட்பது பழனிசாமி தரப்பை அதிரவைத்துள்ளது. இதனால், அதிமுக தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில், சென்னையில் உள்ள எடப்பாடி கே.பழனிசாமி இல்லத்திற்கு வருகை தந்த, நயினார் நாகேந்திரன் அவரை சந்தித்து தொகுதிப் பங்கீடு விவகாரம் குறித்து பேசியதாகக் கூறப்படுகிறது.