எதிர்க்கட்சித் தலைவர் கே. பழனிசாமி - நயினார் நாகேந்திரன் சந்திப்பு... பேசப்பட்டது என்ன?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இத்தேர்தல் களத்தில், இதுவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக மற்றும் நாதக ஆகிய கட்சிகளிடையே நான்குமுனைப் போட்டி நிலவிவருகிறது. மேலும், கூட்டணிப் பேச்சு வார்த்தை, அடுத்தடுத்த மக்கள் சந்திப்புகள், கட்சித் தலைவர்கள் சந்திப்பு மற்றும் தொகுதிப்பங்கீடு என அடுத்தடுத்து பரபரப்பான சம்பவங்களுடன் தமிழக அரசியல் களம் சென்று கொண்டிருக்கிறது.
அதன்படி, சமீபத்தில் அமித் ஷா-வின் தமிழக வருகைக்குப் பின் அதிமுக கூட்டணியில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அடுத்தடுத்த கூட்டணி நகர்வுகள் வேகமெடுத்து இருக்கிறது. அதன்படி நேற்று முன்தினம், அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்தது அன்புமணி தரப்பு பாமக. இது, அதிமுக கூட்டணிக்கு வலுசேர்ப்பதாக பார்க்கப்பட்டது. இதையடுத்து, அன்றைய தினமே, டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி அமித் ஷா-வை சந்தித்துப் பேசினார். அப்போது, பாஜகவின் தொகுதிப் பங்கீடு குறித்தும், அதிகாரத்தில் பங்கு குறித்தும் பேசப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இன்று சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசியிருக்கிறார். இந்த சந்திப்பில், தொகுதிப்பங்கீடு குறித்துப் பேசியதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த சந்திப்பின்போது, அதிமுக சார்பில், அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனும், பாஜக சார்பில் துணைத் தலைவர்கள் சக்கரவர்த்தி, ஜெயபிரகாஷ், கே பி ராமலிங்கம் மற்றும் கே.டி ராகவன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
சுமார், 30 நிமிடத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “பிரதமர் இந்த மாதம் இறுதியில் தமிழகம் வருகை தர உள்ளார். எனவே, பிரதமர் வருகை குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆலோசித்தோம். மேலும், அதிமுக பாஜக இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது” எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து, தொகுதி பங்கீடு தொடர்பாகவும் அமைச்சரவையில் இடம் கேட்கப்படுகிறதா? என்ற கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதில் அளிக்காமல் சென்றார்.

