ராஜ்மோகன் - நயினார் நாகேந்திரன் Pt web
தமிழ்நாடு

”வழிபாட்டு சுதந்திரத்தை நசுக்க நினைக்கிறது” - தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

மாணவர்களின் கலாச்சார உரிமைகளையும், அவர்களின் வழிபாட்டு சுதந்திரத்தையும் நசுக்க நினைக்கும் தவெக அரசு என பாஜ‌‌க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருக்கிறார்.

Premkumar S

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ராஜ்மோகன், சாதி, மதம் சம்பந்தப்பட்ட அடையாளங்களுடன் மாணவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது என்று ஆசிரியர்களிடம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளோம் எனவும் சின்ன கயிறாக இருந்தாலும் அதை அணிந்து வரக்கூடாது; பிரிவினையை ஏற்படுத்தும் எதற்குமே இடம் கிடையாது; சமூக நீதி என்னும் ஒரேயொரு விஷயத்துக்கு மட்டும்தான் பள்ளிக்கூடங்களில் இடம்.

கயிறு

ஓய்வு பெற்ற நீதி அரசர் சந்துரு அவர்கள் கல்வி நிலையங்களில் சாதிய வன்முறைகளை தடுக்கும் விதமாக அரசுக்கு சில பரிந்துரைகளை வழங்கி உள்ளார். நான் அவரை நேரில் சந்தித்து பேசி இருக்கிறேன். நீதி அரசர் சந்துரு அவர்களின் பரிந்துரையின்படி குறிப்பிட்ட கால இடைவெளியில் சாதிய வன்முறைகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்தார். இந்தசூழலில் தான், மதம் சார்ந்த அடையாளங்களை பள்ளிகளில் அணிந்து வரக்கூடாது என அமைச்சர் ராஜ்மோகன் கூறியிருந்ததற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கல்வி வளாகங்களுக்குள் மதம் சார்ந்த அடையாளங்களோடு யாரும் வரக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் கூறியிருப்பது, தமிழகத்தின் பாரம்பரியக் கலாச்சாரத்தின் மீதும், பண்பாட்டு விழுமியங்கள் மீதும் தொடுக்கப்பட்ட நேரடித் தாக்குதலாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் (பிரிவு 25) ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கியுள்ள வழிபாட்டுச் சுதந்திரம் மற்றும் மதச் சுதந்திரத்தை முற்றிலும் பறிக்கும் இத்தகைய அறிவிப்பை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

நயினார் நாகேந்திரன்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டுமே தவிர, மாணவர்களின் சுய அடையாளங்களை அழிக்கும் கூடாரமாக மாறக்கூடாது. ஆனால், தனது அதிகார மமதையை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ள தவெக அரசு, முற்போக்கு என்ற போர்வையில் காலாவதியான நாத்திகக் கொள்கைகளை இறக்குமதி செய்து, தமிழக மக்களின் ஆன்மிக வாழ்வியலோடு விளையாட வேண்டாம் என எச்சரிக்கிறேன். எனவே, மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் இந்த அறிவிப்பைத் தவெக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.