பிரியாணி என்பதை உணவு வகைகளில் ஒன்றாக மட்டும் கருதாமல் அதனை தமிழ்நாடு கொண்டாடிக் கொண்டிருக்கிறது என்றே சொல்லவேண்டும். அந்த அளவுக்கு தமிழ்நாட்டில் பிரியாணி விற்பனை நடந்துவருகிறது. தமிழகத்தில் மட்டும் ஆண்டுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு பிரியாணி விற்பனை நடந்துள்ளதாக வெளியாகி உள்ள தரவே இதற்கு உதாரணம்.
சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, இறால் பிரியாணி, முட்டை பிரியாணி, மீன் பிரியாணி, பீஃப் பிரியாணி என அனைத்துவிதமான பிரியாணிகளுக்கும் இங்கு ரசிகர்கள் உண்டு.
சைவப்பிரியர்களுக்கும் வெஜ்பிரியாணி, காளான் பிரியாணி என பலவகைகள் இருக்கின்றன. பிரியாணி மீதான மக்களின் மோகத்தை இங்கு நடக்கும் வியாபாரமே பிரதிபலிக்கிறது. தமிழ்நாட்டில் பிரியாணியின் சந்தைமதிப்பு ஆச்சரியமூட்டும் வகையில் இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் பிரியாணி வர்த்தகம் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு நடப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
பிரியாணிக்கு என்று பிரத்யேகமாக பெரிய பிராண்டட் பெயர்களுடன் இயங்கும் உணவகங்களின் சந்தை 2,500 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. நடுத்தர உணவகங்கள், சாலையோர கடைகள் என விற்கப்படும் பிரியாணிக்கான சந்தைமதிப்பு 7,500 கோடி ரூபாயாக இருக்கிறது. தமிழ்நாட்டிலேயே பிரியாணிக்கு மிகப்பெரிய சந்தையாக சென்னை விளங்குகிறது. மொத்த வர்த்தகத்தில் இப்பகுதியில் மட்டும் 50 சதவிகித பிரியாணி விற்பனை நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.
எத்தனை உணவகங்கள் இருந்தாலும் பிரியாணிக்கு என தனி மவுசு சென்னை வாசிகளிடம் இருக்கிறது என்கிறார்கள் ஓட்டல் துறையினர். வருத்தமோ, மகிழ்ச்சியோ, கொண்டாட்டமோ, குடும்ப விழாவோ.. விருந்தென்று முடிவு செய்துவிட்டால், பலரின் முதன்மையான தேர்வில் பிரியாணிதான் சூப்பர் ஸ்டார்.. மொத்தத்தில் பிரியாணி என்றால் உணவு மட்டுமல்ல, அது ஒரு எமோஷன் என்பதையே இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.