அரிட்டாபட்டி: 48 கிராமங்களையும் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க கோரி போராட முடிவு!
செய்தியாளர்கள் ரமேஷ் மற்றும் பிரசன்ன வெங்கடேசன்
அரிட்டாப்பட்டி உட்பட 48 கிராமங்களில் கொண்டுவர டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஏலம் விடப்பட்டதையடுத்து, இத்திட்டத்துக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மக்களின் உணர்வையடுத்து தமிழக சட்டப்பேரவையில் இதற்காக சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திட்டத்தை கைவிட வேண்டும் என்று தமிழக எம்.பிக்களும் மத்திய அரசிடம் வலியுறுத்தியிருந்தனர். தொடர் அழுத்தம் ஏற்பட்ட நிலையில், திட்டத்தை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூரில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அரிட்டாப்பட்டி உள்ளிடட 48 கிராமங்களையும் உள்ளடக்கி பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் பெருக்கம், தொல்லியல் மற்றும் வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து அரசாணைகள் வெளியிட்டு அரசிதழில் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மத்திய அரசு அதனை ஏற்று மறு ஆய்விற்கான அறிவிப்பை கைவிட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.
ஜனவரி 7ஆம் தேதி நடைபெறக்கூடிய போராட்டத்திற்கு மேலூர் வர்த்தக சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளதால் அன்றைய தினம் மேலூரில் கடை அடைப்பு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு அரிட்டாப்பட்டி மற்றும் மீனாட்சிபுரம் கிராமங்களில் உள்ள 193 ஹெக்டேர் நிலப்பகுதியை மட்டுமே பல்லுயிர் கலாச்சார பகுதியாக அறிவித்துள்ளது. மத்திய அரசின் தற்போதைய அறிவிப்பால், 1800 ஹெக்டேர் நிலப்பகுதியில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகக் கூறும் மக்கள், வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த புராதானச் சின்னங்களை பாதுகாக்கும் அறிவிப்பும் இல்லை. பல்லுயிர் பாதுகாப்புப் பகுதியைத் தவிர்த்து மீதம் உள்ள பகுதியில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்த பகுதிக்கும் நிச்சயம் பாதிப்பு இருக்கும் என்று அச்சம் தெரிவிக்கிறார்கள். இத்திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும் என்பதே விவசாயிகளின் வலியுறுத்தலாக இருக்கிறது.