சென்னையில் கடந்த சில வாரங்களாக நிகழ்ந்து வரும் காகங்களின் திடீர் இறப்புகளுக்கு H5N1 பறவைக் காய்ச்சல் காரணம் என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள், போபாலில் உள்ள ஐசிஏஆர் நிஷாத் ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டதில் இந்தத் தொற்று உறுதியானது. சென்னையில் மட்டும் சுமார் 1,000 முதல் 1,500 காகங்கள் வரை இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்திருக்கலாம் எனத் தன்னார்வ அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.
பறவைக் காய்ச்சல் வைரஸ் பொதுவாக மனிதர்களுக்கு நேரடியாகப் பரவுவதில்லை என்றாலும், பாதிக்கப்பட்ட அல்லது இறந்த பறவைகளுடன் நெருக்கமான தொடர்பு கொள்ளும்போது பரவும் அபாயம் உள்ளது. இறந்த பறவைகளின் உமிழ்நீர், சளி மற்றும் எச்சங்களில் இந்த வைரஸ் அதிகளவில் இருக்கும். ஒரு நபர் இறந்த பறவையைக் கையாளும்போதோ அல்லது அவை கிடந்த இடத்தைச் சுத்தப்படுத்தும்போதோ, காற்றில் கலந்திருக்கும் வைரஸ் துகள்களை சுவாசிப்பதன் மூலம் தொற்று ஏற்படலாம். அரிதான நிகழ்வுகளில், வைரஸ் பாதித்த நீர்நிலைகளில் குளிப்பதன் மூலமும் பரவ வாய்ப்புள்ளது.
காய்ச்சல், தலைவலி, இருமல், மூச்சுத் திணறல் போன்றவை பறவைக் காய்ச்சலுக்கான அறிகுறிகளாக இருக்கலாம் என்பதால் இவற்றுக்கான மருத்துவ சிகிச்சையை தவிர்க்கவோ தள்ளிப்போடவோ கூடாது என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். இது தொடர்பாக மத்திய மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்பண்ணை அமைச்சகம் சார்பில் தமிழக அரசு தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எதில் பறவைக்காய்ச்சல் பாதிப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
பொதுமக்கள், தங்கள் பகுதியில் காகங்களோ அல்லது இதர பறவைகளோ அசாதாரணமாக இறந்தால், உடனடியாக உள்ளூர் மாநகராட்சி அல்லது கால்நடைத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். வெளியில் சென்று வந்தவுடன் கைகளை சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு நன்கு சுத்தப்படுத்தவும். இறைச்சி மற்றும் முட்டைகளை அதிக வெப்பநிலையில் வேகவைத்து உண்ண வேண்டும். பறவைப் பண்ணைகளை அடிக்கடி தூய்மைப்படுத்த வேண்டும். பறவைகளுக்கான உணவு மற்றும் தண்ணீரை திறந்த நிலையில் வைக்கக் கூடாது. இறந்த அல்லது நோய்வாய்ப்பட்ட பறவைகளை வெறும் கைகளால் தொடக் கூடாது. கையுறை அணிவது அவசியம். இறந்த பறவைகளை 8 முதல் 10 அடி ஆழத்தில் புதைக்கவோ அல்லது எரிக்கவோ வேண்டும் என்று அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.