பாரதிதாசன் - வன்னி அரசு Pt web
தமிழ்நாடு

”பாரதிதாசன் உதவித் தொகை விடுவிப்பு; திமுக அரசியல் செய்கிறது” - அமைச்சர் வன்னி அரசு

மலேசிய பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பு பயின்று வரும் மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி உதவித்தொகை விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் திமுக அரசியல் செய்வதாக அமைச்சர் வன்னி அரசு குற்றஞ்சாட்டியுள்ளார்.

Premkumar S

தமிழக அரசின் உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் மூலம் மலேசியாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் ஆராய்ச்சி மாணவராகப் பயின்று வருகிறார் பாரதிதாசன் . கடந்த ஆகஸ்ட் மாதம், தனக்கான கல்வி உதவித்தொகை இன்னும் கிடைக்கவில்லை எனக் கூறி அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த விவகாரம் சட்டப்பேரவை வரையிலும் எதிரொலித்திருந்தது. இந்த நிலையில், சமூகநீதி மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வன்னியரசு, மாணவர்களுக்கான நிதி வழங்கப்பட்டு வருவதாக விளக்கம் அளித்திருந்தார். ஆனால், அதற்குப் பிறகும் தனக்கு உரிய நிதி கிடைக்கவில்லை என பாரதிதாசன் தொடர்ந்து தெரிவித்து வந்தார்.

பாரதிதாசன்

இந்தநிலையில், சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்த பாரதிதாசன், தனக்கு தமிழக அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய நிதி கிடைக்காத நிலையில், தன்னை பல்கலைக்கழகத்திடம் இருந்து நீக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக கண்ணீர் மல்க தெரிவித்திருந்தார். இந்த வீடியோ, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவருக்கு உரிய நிதி அளிக்க வேண்டும் எனவும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அறிவுறுத்தியிருந்தனர். எனினும், அவரின் முதலாமாண்டுக்கான நிதி ஒதுக்கப்பட்டு விட்டதாகவும், அதற்கான செலவினப் பட்டியலை அவர் சமர்ப்பிக்காத நிலையில், உதவித்தொகை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்துப் பேசியிருந்த திமுக தலைவர் ஸ்டாலின், பாரதிதாசனுக்கு நிதி ஒதுக்க முடியுமா? முடியாதா? என்பதை தெரிவித்துவிட வேண்டும் எனவும் இல்லாதபட்சத்தில் திமுக உதவும் எனவும் தெரிவித்திருந்தார். எனினும், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, பாரதிதாசன் முறையாக பில்களை அனுப்பாவிட்டாலும் அவரது படிப்பு தடைபட கூடாது என்பதற்காக அவருக்கு நிதி விடுவிக்கப்படும் என அமைச்சர் வன்னியரசு உறுதியளித்திருந்தார்.

இந்தச்சூழலில் தான், தற்போது 2-ம் ஆண்டுக்கான முழுமையான நிதி தற்போது விடுவிக்கப்பட்டிருக்கிறது.

வன்னி அரசு

இதைத்தொடர்ந்து, இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கும் அமைச்சர் வன்னி அரசு, ”பாரதிதாசன் விவகாரத்தில் திமுக எங்கள் மீது குற்றம் சாட்டுகிறது. நாங்கள் அரசியல் செய்யவில்லை; திமுக தான் அரசியல் செய்கிறது. பாரதிதாசன் குடும்பத்தை உளவுத்துறை போலீஸ் மூலம் மிரட்டியதாக கூறுவது திட்டமிட்ட அவதூறு. தம்பி பாரதிதாசன் எனது தம்பி போன்றவர். அவரது பாதுகாப்புக்கும், படிப்புக்கும் நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். சட்டத்திற்கு புறம்பாக யாரும் செல்லக்கூடாது பில் வழங்காதது துறை ரீதியான நடைமுறை. கடந்த காலத்திலும் இதே நடைமுறைதான் பின்பற்றப்பட்டது. பில் வராவிட்டாலும் கல்வி நலனை கருதி முழு தொகையும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.