தமிழ்நாடு

உஷாராகுங்கள்.. அதிகரிக்கும் ஓன் போர்ட் கார் சவாரி கலாச்சாரம்..!

உஷாராகுங்கள்.. அதிகரிக்கும் ஓன் போர்ட் கார் சவாரி கலாச்சாரம்..!

webteam

சென்னையில் செல்போன் ஆப் மூலம் ஓன் போர்ட் காரில் சவாரி ஏற்றி செல்லும் கலாச்சாரம் வளர்ந்து வருகிறது. இந்த ஆப் மூலம் சென்னையில் இருந்து பெங்களூருக்கு சவாரி ஏற்றி சென்ற  காரை பூவிருந்தவல்லி வட்டார போக்குவரத்து துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை அடுத்து அத்தியாவசிய பொருட்கள் மட்டுமின்றி வாகன சேவை கட்டணங்கள் 25 சதவிகிதம் வரையில் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் வெளியூர் செல்லும் பயணிகள் ஆபத்தை அறியாமல் பங்களிப்பு மூலம் பயணம் செய்யும் வகையில் சென்னையில் ஓன் போர்ட் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் சவாரி ஏற்றி செல்லும்  புதிய ஆப் செல்போனில் அறிமுகமாகியுள்ளது.

இதில் சொந்த பயன்பாட்டுக்கு வாங்கக்கூடிய கார்களை சவாரி ஏற்றி செல்லும் வகையில் இந்த ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சொந்த பயன்பாட்டுக்கு வாங்கும் காரை அதன் உரிமையாளர் எங்கெல்லாம் செல்கிறார் என்பதை இந்த ஆப்பில் பதிவிடுகிறார். அதே பகுதிக்கு செல்லும் வாடிக்கையார்களுக்கு ஆப் மூலம் இந்த விவரம் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து ஷாரிக் மூலம் வாகனத்தில் சவாரி ஏற்றப்பட்டு அவர்களிடம் கணிசமான தொகை வாங்கப்படுகிறது.

சொந்த பயன்பாட்டுக்கு வாங்கக்கூடிய வாகனங்களை வாடகைக்கு விடுவதும் சவாரி ஏற்றுவதும் சட்டப்படி குற்றமாகும். ஆனால் தற்போது செல்போனில் அறிமுகமாகி வரும் இது போன்ற ஆப்பால் வாகன உரிமையாளர்களுக்கு  பணம் கிடைக்கும் என்ற நோக்கில் சொந்த பயன்பாட்டுக்கு வாங்கக் கூடிய ஓன் போர்ட் கார் பயன்படுத்தப்படுகின்றது.

இதனை தடுக்க அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களும் உஷார்ப்படுத்தப்பட்ட நிலையில் பூவிருந்தவல்லி வழியாக ஓன் போர்ட் கார் ஒன்று சவாரி ஏற்றி செல்ல இருப்பதாக பூவிருந்தவல்லி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு  தகவல் கிடைத்தது. இதையடுத்து போக்குவரத்து அலுவலர்கள் ஏற்பாட்டில் பெங்களூர் வரை செல்லும் காரில் இரண்டு பேர் மதுரவாயல் அருகே சவாரி ஏறியுள்ளனர். அதன்படி அந்த கார் பூவிருந்தவல்லி செக்போஸ்ட் அருகே செல்லும் போது பூவிருந்தவல்லி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கார்த்திக் தலைமையிலான போக்குவரத்து  துறையினர் மடக்கி பிடித்தனர்.

அப்போது, மதுரவாயல் இருந்து பெங்களூர் வரை செல்ல காரில் ஏறிய இருவரிடமும் தலா 700 ரூபாய்  கட்டணம் வசூலித்தது தெரியவந்தது. மேலும் ஓன் போர்ட்காரில் சவாரி ஏற்றி வந்த குற்றத்திற்காக  கார் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் சம்பத் கூறுகையில் “ இது சட்டப்படி குற்றம். இது போன்று ஓன் போர்ட் கார்களில் பொதுமக்கள் பயணிப்பதால் விபத்து நேரிடும்போது காயம் ஏற்பட்டாலோ அல்லது  உயிர் இழந்தாலோ காப்பீடு தொகை கிடைக்காது. அதேபோல் வாடகை கார் ஓட்டுனர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் கார் உரிமையாளர்கள் மட்டுமின்றி மக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்” என தெரிவித்தார்.

அதேபோல் பறிமுதல் செய்யப்பட்ட காரின் உரிமையாளர் கூறுகையில் பணத்தை பொருட்படுத்தாமல்  சேவை மனப்பான்மையில் இதனை செய்ததாகவும், செல்போனில் ஆப் உள்ளதால் இது அனுமதி வாங்கி செயல்படுகின்றது என எண்ணி சவரி ஏற்றியதாக தெரிவித்தார்.

தகவல்கள்: நவின் குமார், செய்தியாளர்.