தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில், தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய வானிலை அறிவிப்பு கவனம் பெற்றுள்ளது. இதன் தாக்கத்தால் தமிழகத்தில் வரும் நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய மேலடுக்கு காற்றுச் சுழற்சியின் தாக்கத்தால், வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த குறைந்த காற்றழுத்தப் பகுதியுடன் தொடர்புடைய காற்றுச் சுழற்சி, கடல் மட்டத்திலிருந்து சுமார் 7.6 கிலோமீட்டர் உயரம் வரை நிலவுவதாகவும், இந்த அமைப்பு அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கடல் சீற்றம் காணப்பட வாய்ப்புள்ளதாகவும், ஆகஸ்ட் 16 முதல் 18ஆம் தேதி வரை வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 60 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் IMD எச்சரித்துள்ளது. இதற்கிடையே, தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப்பாதையின் காரணமாக, இன்று முதல் 21ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆகஸ்ட் 17ஆம் தேதி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், ஆகஸ்ட் 18ஆம் தேதி செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும், ஆகஸ்ட் 19ஆம் தேதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம் மற்றும் நீலகிரி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.