கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல சுழற்சி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. இது மேலும் மேலும் வலுப்பெற்று நேற்று புயலாக உருவெடுத்தது. இதற்கு ஈரான் சூட்டிய 'அக்வான்' என்று பெயர் வைக்கப்பட்ட நிலையில், இந்த புயல் இன்று தீவிர புயலாக உருவெடுத்ததாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும் இந்த புயல் நாளை மறுநாள் நண்பகலில் ஆந்திரா மாநிலத்தின் நெல்லூர் மற்றும் துனி இடையே, ஆந்திரா–ஏனாம் கடற்கரைப் பகுதியில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மைய கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 120 முதல் 130 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இடையிடையே காற்றின் வேகம் மணிக்கு 145 கி.மீ. வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த புயல் சுமார் 9 மணி நேரமாக ஒரே இடத்தில் நிலைகொண்டுள்ள நிலையில், பின்னர் மணிக்கு 3 கிலோமீட்டர் என்ற வேகத்தில் மெதுமாக நகர்ந்து வருகிறது.
இந்த புயல் முதலில் தமிழ்நாட்டின் பகுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆந்திராவில் புயல் கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளதால் இந்த புயல் தமிழ்நாட்டில் குறைந்த அளவே மழையை கொடுக்கும் என்பது உறுதியாகியுள்ளது. குறிப்பாக இந்த புயல் காரணமாக திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களில் மட்டுமே கனமழை பெய்யும் சூழல் நிலவுகிறது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், தென் தமிழகத்தின் சில பகுதிகள், வட கடலோர தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதே போல நாளை சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.