சென்னை தி.நகர் பர்க்கித் சாலையில் செயல்பட்டு வருகிறது HDFC வங்கி கிளை. இங்கு இன்று மதியம் 12:40 மணியளவில் வங்கிக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் வங்கியின் வர்த்தக மற்றும் அந்நிய செலவாணி பிரிவின் மேலாளரான தினேஷ் என்பவர் இருக்கும் இடத்திற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து "உன்னால தாண்டா என் வாழ்க்கை வீணாப் போச்சு" எனக் கூறி அழுதபடியே தினேஷின் காது மற்றும் முதுகு ஆகிய பகுதிகளில் வெட்டியுள்ளார். இதில் தினேஷின் காது பாதியாக வெட்டுப்பட்டு தொங்கியுள்ளது. தினேஷ் ரத்த வெள்ளத்தில் கூக்குரலிட்டு அழுத்துள்ளார். இந்த சம்பவத்தால், அதிர்ச்சி அடைந்த வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள், பின் சுதாரித்து தாக்கிய மர்ம நபரை பிடித்து தி.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தி.நகர் போலீசார் கத்தியால் வெட்டிய மர்ம நபரை தி.நகர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணையில் ஈடுபட்டனர். இதனிடையே வெட்டுபட்ட வங்கி அதிகாரி தினேஷை அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வெட்டுபட்ட வங்கி அதிகாரி தினேஷ் சென்னை கொளத்தூர் அடுத்த பொன்னியம்மன்மேடு பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், வங்கி அதிகாரியை வெட்டிய நபர் புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி சேர்ந்த சதீஷ் (34) என்பதும் தெரியவந்தது.
போலீசார் தொடர் விசாரணையில், தாக்குதலுக்கு உள்ளான வங்கி அதிகாரி தினேஷ் என்பவரும், தாக்கிய சதீஷ் என்பவரும் சென்னை அண்ணா சாலை - நந்தனம் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் ஒன்றாக பணிபுரிந்து வந்ததும் அப்போது நன்னடத்தை விதிமீறல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சதீஷை வங்கி நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இதற்கு காரணம் தினேஷ்தான் என சதீஷ் நினைத்து அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், சதீஷ் அபிராமபுரம் காவல் நிலையம், முதல்வர் தனிப்பிரிவு ஆகியவற்றில் தினேஷ் மீது புகார் அளித்துள்ளதும் இந்த புகாரின் அடிப்படையில் அபிராமபுரம் போலீசார் தினேஷ் மற்றும் சதீஷ் ஆகியோரை வரவழைத்து விசாரணை நடத்தியதும் தெரியவந்தது.
இந்த நிலையில் தன்னை வேலையில் இருந்து நீக்கியதற்கு தினேஷ் மட்டும்தான் காரணம் என அவர் மீது சதீஷ் பகையோடு சுற்றி வந்துள்ளார். இருப்பினும் கேரளா மாநிலத்திற்கு சென்று வேலை தேடியுள்ளார். அங்கும் வேலைகிடைக்காததால், தன்னுடைய இந்த நிலைமைக்கு காரணமாக நினைத்த தினேஷை பழிவாங்குவதற்காக கேரளாவிலிருந்து முக்கால் அடி நீளம் கொண்ட கத்தியை வாங்கிகொண்டு சென்னை வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை வந்த சதீஷ், தினேஷை கடந்த சில தினங்களாக தேடி பாண்டி பஜார், அண்ணா சாலை, தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு சென்று வந்த நிலையில், தினேஷ் தி.நகர் பர்கிட் சாலையில் உள்ள தனியார் வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்து வருவதை அறிந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று மதியம் 12:30 மணிக்கு வங்கிக்கு சென்ற சதீஷ், அங்கு தனது கேபினில் பணிபுரிந்து வந்த தினேஷிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு பின் மறைத்து வைத்திருந்த கத்தியால் தாக்கியதும் தெரியவந்தது.
இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார், கைது செய்யப்பட்ட சதீஷிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.