அலிகான் துக்ளக் கோப்புப்படம்
தமிழ்நாடு

பாங்காக் டூ சென்னை: OG கஞ்சா வழக்கில் அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்

கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், புதிதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில், புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெ.அன்பரசன்

போதைப் பொருள் தொடர்பாக போலீசார் மேற்கொண்டுள்ள தீவிர நடவடிக்கை:

போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த போலீசார் பல சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக சென்னையில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் பயன்பாட்டை, போதைப் பொருள் தடுப்பு பிரிவு அமைத்து அதிரடியாக கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

போதைப் பொருள் பயன்படுத்துபவர்கள் சிக்கினால் அவர்களுக்கு எங்கிருந்து போதைப் பொருள் கிடைக்கிறது, மொத்தமாக எங்கிருந்து விற்பனை செய்யப்படுகிறது, அதை கடத்தும் நபர்கள் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்படும். மேலும் இதில் தொடர்புடைய நபர்கள் அனைவரையும் தனிப்படை அமைத்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கல்லூரி மாணவர்களுக்கு செல்போன் செயலி மூலம் போதைப் பொருட்கள் விற்பனை:

இந்நிலையில் சமீபத்தில் சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு செல்போன் செயலி மூலம் போதைப் பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக 5 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மன்சூர் அலிகான், அலிகான் துக்ளக்

இவர்கள் 'ரெடிட்' ஆன்லைன் ஆப் மூலமாக போதைப் பொருளை வாங்கி பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, இதில் தொடர்புடைய 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர் காவல்துறையினர். தொடர்ந்து இந்த போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்த நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் மற்றும் அவரது 6 நண்பர்களை ஜெஜெ நகர் போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர் .

போதைப் பொருளை நண்பர்களுக்கும் சப்ளை செய்த அலிகான் துக்ளக்:

ஜிடோன் முகமது ஜபின் மூலம் அலிகான் துக்ளக் ஓஜி கஞ்சா, மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருளை வாங்கி பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அலிகான் துக்ளக் தான் போதைப் பொருளை உட்கொள்வதை தானே வீடியோ பதிவு செய்து வைத்துள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர். அலிகான் துக்ளக் தான் பயன்படுத்தி வந்த போதைப் பொருளை நண்பர்களுக்கும் சப்ளை செய்தது தெரியவந்தது. இந்த வழக்கில், சமீபத்தில் நவாஸ் முகமது என்ற நபரும் மற்றும் அவரது மகன் அசாரூதின் என்பவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

Arrested

பாங்காக்கிலிருந்து வந்த ஓ.ஜி கஞ்சா:

குறிப்பாக டார்க் வெப், வி.பி.என் மூலமாக பாங்காக்கிலிருந்து ஓ.ஜி கஞ்சா ஆர்டர் செய்து அதை விமானம், கப்பல் மற்றும் கொரியர் மூலமாக சென்னைக்கு கடத்தி வருவது தெரியவந்துள்ளது. சென்னையில் வாட்ஸ் அப், டெலிகிராம் குரூப் உள்ளிட்ட நெட்வொர்க் அமைத்து ஓ.ஜி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. 1 கிராம் 1500 ரூபாய்க்கு வாங்கி 3000 ரூபாய் வரை விற்பனை செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. கடந்த ஒரு வருடமாக கைதான தந்தை மகன் இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. போதைப் பொருள் விற்பனை செய்யும் நபர்களை கைது செய்வதோடு, அவர்கள் சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையயும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்

முக்கிய நபரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்:

அந்த வகையில் கைதான தந்தையின் மகனும் சேர்ந்து கஞ்சா விற்பனை மூலமாக வாங்கிய 12 சவரன் தங்க நகைகள் ஜெ.ஜெ நகர் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து 410 கிராம் ஓஜி கஞ்சா, 28 ஆயிரம் பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை இவ்வழக்கில் மொத்தம் 19 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை போதைப் பொருளை பயன்படுத்தி அவர்கள் மூலமாக விற்பனை செய்யும் நபர்கள் யார் யார் என கண்டுபிடித்து கைது நடவடிக்கை மேற்கொண்ட போலீசார் கஞ்சா பாங்காக்கிலிருந்து சப்ளை செய்யப்படுவதை கண்டுபிடித்ததன் அடிப்படையில் அடுத்த கட்டமாக வெளிநாட்டிலிருந்து போதைப் பொருள் கடத்தும் அந்த முக்கிய நபரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.