செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்
ஆவடி அடுத்த புதிய கன்னியம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (22). சி பிரிவு ரவுடியான இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 14 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், இவரை மர்ம நபர்கள் சிலர் வெளியே அழைத்துச் சென்று சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் ஆவடி டேங்க் பேக்டரி போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் தினேஷின் நண்பர் தவளை என்ற குமார் நேற்று காலை மது அருந்தலாம் என தினேஷை வெளியே அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் தினேஷை பல இடங்களில் சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில், தினேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நுண்ணறிவு போலீசார் ரவுடிகளை கண்காணிக்கத் தவறியதுதான் கொலைக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.