செய்தியாளர்: காமராஜ்
விழுப்புரம் இருவேல்பட்டு கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்ற அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாத்தனூர் அணையை திறந்துவிட்டது ஏன் என்றும், அதனால் பல கிராமங்கள் மூழ்கியதாகவும் தெரிவித்து இருவேல்பட்டு கிராமத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அம்மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்றிருந்தார் அமைச்சர் பொன்முடி. அப்போது அவர் காரில் அமர்ந்தபடியே குறைகளை கேட்டதால், சிலர் திடீரென ‘காரில் இருந்து இறங்கமாட்டீங்களா?’ எனக்கேட்டு அவர்மீது சேற்றை வீசனர். இதனையடுத்து அமைச்சர் பொன்முடி காரை விட்டு கீழே இறங்கி மக்களுக்கு தேவையானதை செய்து தருகிறோம் என கூறிவிட்டு அங்கிருந்து புறபட்டு விழுப்புரம் திரும்பினார்.
சூழல் அறிந்து ஆட்சியர் பழனி மக்களோடு பேச்சுவார்த்தை நடத்தி, மக்களை சமாதானம் செய்தார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.