அசாம் மாநிலத்தை சேர்ந்த பெண் சசிதா பேகம். இவரது கணவர் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்னதாக இறந்த நிலையில், இவர்களுக்கு ஆறு வயதில் சகிப் உதின் மற்றும் மூன்று வயதில் சசிதுல் இஸ்லாம் ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் சசிதா பேகம் தனது இரு மகன்களுடன் சென்னையில் உள்ள காய்கறி கடை ஒன்றில் வேலை பார்ப்பதற்காக கடந்த 12ஆம் தேதி ரயிலில் எழும்பூருக்கு வந்துள்ளார். பின்னர் காய்கறி கடை ஊழியர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருப்பதாக தெரிவித்ததால் இரண்டு மகன்களுடன் சசிதா பேகம் அங்கு சென்றுள்ளார்.
அப்போது சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சசிதா பேகமின் 6-வயது மகன் சகீப் உதீன் திடீரென காணாமல் போயுள்ளார். இதையடுத்து சகிதா பேகம் அங்கு நீண்ட நேரமாக தன் மகனை தேடியுள்ளார். எங்கு தேடியபோதும் சகீப் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
பின்னர், உடனடியாக சகிதா பேகம் சென்ட்ரல் பாதுகாப்பு படை மற்றும் சென்ட்ரல் ரயில்வே போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் சிசிடிவி காட்சிகளை பார்த்த போது சிறுவன் முதலில் இரண்டு இளைஞர்களுடன் இருந்த நிலையில், அவர்கள் ரயிலுக்கு நேரமானதால் கிளம்பிய நிலையில், அடுத்ததாக சிறுவன் ஒரு பெண்ணுடன் சென்றது தெரியவந்துள்ளது.
அன்று தொடங்கி கடந்த எட்டு நாட்களாக பல இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது. எந்தவித நடவடிக்கையும் இல்லாததால், மகனை தொலைத்த தாய் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அவரது நண்பர் பைசுல் என்பவருடன் தினமும் சென்று வருவதாக சொல்லப்படுகிறது.
இதுபற்றி சிறுவனின் தாய் கூறுகையில், “கடந்த எட்டு நாட்களாக சென்ட்ரல் ரயில் நிலையம், பெசன்ட் நகர், காவல் ஆணையர் அலுவலகம் என தொடர்ந்து அலைக்கழிக்கப்படுகிறோம். இதுவரை எனது மகனை கண்டுபிடித்து தரவில்லை. உரிய நடவடிக்கை எடுத்து எனது மகனை கண்டுபிடித்து தர வேண்டும்” என சிசிடிவி காட்சிகள் மற்றும் புகைப்பட ஆதாரத்துடன் வேண்டுகோள் வைத்துள்ளார்.