அரவிந்தராஜ்
அரவிந்தராஜ் புதிய தலைமுறை
தமிழ்நாடு

’முதல் பரிசோடு வருவேன்னு சொல்லிட்டு போன என் மகன் உயிரோடு வரல’ - ஜல்லிக்கட்டு வீரரின் தாய் உருக்கம்

PT WEB

நிருபர் - மருது (மதுரை)

ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் பரிசு காருடன் வருவதாக சென்ற என் மகன் உயிரோடு வரவில்லை- பாலமேடு ஜல்லிக்கட்டில் கடந்தாண்டு உயிரிழந்த வீரரின் தாய் பேட்டி.!!

அரவிந்தராஜ்

மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியைச் சேர்ந்த அரவிந்தராஜ் என்ற 25 வயது வாலிபர் 2023ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு களத்தின் போது ஒன்பது மாடுகளை பிடித்த நிலையில், பத்தாவது மாடுபிடிக்கும் பொழுது மாடு குத்தி படுகாயம் அடைந்தார்.

மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் உயிரிழந்த அரவிந்த்ராஜ் குடும்பத்தினருக்கு அரசுசார்பாக மூன்று லட்ச ரூபாயும் சட்டமன்ற உறுப்பினர் சார்பாக 2 லட்சம் ரூபாய் என மொத்தம் 5 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டது.

மாடுபிடி வீரர் அரவிந்த்ராஜ் உயிரிழந்த ஓராண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பாலமேடு பகுதியில் உள்ள அவருடைய வீட்டு வாசலில் அவருடைய நினைவு சார்பாக திருவருள் படம் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

இதனை மாடுபிடி வீரர்களும் பொதுமக்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் உயிரிழந்த அரவிந்த்ராஜ் தாய் தெய்வானை அரவிந்தராஜ் குறித்து பேசும்போது,

” என்னுடைய மகன் பல ஜல்லிக்கட்டு பங்கேற்று பல பரிசுகள் பெற்றுள்ளார். மேலும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் கடந்த ஆண்டு காருடன் வருவேன் என கூறிவிட்டு சென்றார். ஆனால் அவன் உயிருடன் வரவில்லை. அவன் இல்லாதது எனக்கு பெரிய இழப்பு. உடல்நிலை பாதிக்கப்பட்டு அவன் நினைவாகவே இருக்கிறேன். இறந்த என்னுடைய மகனுக்கு நினைவுத்தூள் மற்றும் கல்லறை அமைப்பதாக கூறினார்கள். அரசு அதை செய்து கொடுத்தால் உதவியாக இருக்கும்.ஆகவே வீரர்கள் கவனமாக களத்தில் விளையாட வேண்டும்.” என்றார்.

உயிரிழந்த அரவிந்த் ராஜ் தந்தை ராஜேந்திரன் பேசுகையில், ”என்னுடைய மகன் பல போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை பெற்றுள்ளார். அவன் இல்லாதது பெரும் இழப்பை எங்களுக்கு தந்துள்ளது. அவர் நினைவாக ஊரில் கல்வெட்டு அல்லது தூண் வைக்க வேண்டும். எனக்கு ஏற்பட்ட இந்த இழப்பு போல் எந்த பெற்றோருக்கும் ஏற்படக்கூடாது.” என கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்