காவிரி நீர் விவகாரத்தில் தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் ஜோசப் விஜயை குறிவைத்து கடுமையான விமர்சனங்கள் செய்ததாக தவெக மகளிரணி புகார் அளித்தது. இதனைத் தொடர்ந்து 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தஞ்சை காவல்துறை இன்று காலை அவரது இல்லத்தில் வைத்து கைது செய்தது. இந்த நடவடிக்கையை திமுக தலைவர் முக ஸ்டாலின் கண்டித்து, த.வெ.க. அரசின் அலட்சிய ஆணவப் போக்கை குற்றம் சாட்டியுள்ளார்.
செய்தியாளர் - M.மீரா
காவிரி நீர் விவகாரத்தில் தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் ஜோசப் விஜயை குறித்து சர்ச்சைக்குரிய, தரம் தாழ்ந்த பேச்சு நடத்தியதாக தவெக மகளிரணி புகார் அளித்தது. இதனைத் தொடர்ந்து 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தஞ்சை காவல்துறை இன்று காலை அவரது இல்லத்தில் வைத்து கைது செய்தது. இந்த நடவடிக்கையை கண்டித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முக ஸ்டாலின் தனது X தளத்தில், காவிரி உரிமையை நிலைநாட்ட துப்பு இல்லாத, த.வெ.க. அரசின் அலட்சிய ஆணவப் போக்கைக் கண்டித்து தஞ்சை கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி, த.வெ.க. அரசின் கையாலாகாத்தனத்தை அம்பலப்படுத்தினார்.
"நிர்வாகத் திறனற்ற டம்மி முதலமைச்சரால் காவிரி நீரைக் கொண்டுவர முடியவில்லை, மேகதாது அணையைத் தடுக்க பேசவும் முடியவில்லை, விவசாயிகள் வேதனையில் கண்ணீர் வடிக்கையில், அமைச்சர்கள் முதலமைச்சர் நடித்த படத்தை பார்த்து கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள், ஜோக்கர் அமைச்சரவை தமிழ்நாட்டில் அமைந்திருக்கிறது" என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சித் தலைவர் வைத்தார். இதற்கு இதுவரை ஆட்சியாளர்களால் 'பதில் சொல்ல முடியவில்லை.
நாளை நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும்போது, எதிர்க்கட்சித் தலைவர் அவையில் இருக்கக் கூடாது என்று நினைத்து இந்த நடவடிக்கையைத் தொடங்கி இருக்கிறார்கள்.
நாடு முழுவதும் கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் காட்டிய எதிர்ப்புக்குப் பிறகு, 'கைது செய்யும் எண்ணம் இல்லை, விசாரணை முடிந்ததும் விடுவித்துவிடுவோம்' என்று நீதிமன்றத்தில் த.வெ.க. அரசு வழக்கறிஞர் சொல்லி இருக்கிறார்.
விசாரணை நடத்துவதுதான் நோக்கம் என்றால் சென்னையிலேயே வைத்து நடத்தி இருக்கலாமே? எதற்காக தஞ்சாவூர் அழைத்துச் செல்ல வேண்டும்?
'உதயநிதியை இன்றே விடுதலை செய்ய வேண்டும்' என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கி இருக்கும் உத்தரவு, த.வெ.க.வின் பாசிசத் தன்மைக்கு விழுந்த அடி!
ஆட்சிக்கு வந்தது முதல் தன்னையும் தனது அமைச்சர்களையும், ஆட்சியையும் விமர்சிப்பவர்களைக் கைது செய்யும் ஒரே வேலையைத்தான் முதலமைச்சர் விஜய் பார்த்து வருகிறார்.
உதயநிதி தனது உரையில் ஆபாசமாக ஏதும் பேசவில்லை. யாரையும் குறிப்பிடவில்லை. அவர் பேசாத ஒன்றை பேசியதாகச் சிலர் பரப்பியதைச் சரிபார்க்காமல் அரசியல் தலைவர்கள் சிலர் உதயநிதியைக் கண்டிப்பது பிரச்சினையை திசைதிருப்புவது ஆகும். உதயநிதி தவறுதலாகப் பேசுகிறவர் அல்ல. அப்படியே தவறுதலாகப் பேசினாலும், உடனடியாக மன்னிப்பு கேட்கும் இயல்புடையவர்.
தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகக் கைது செய்துள்ள கழக உடன்பிறப்புகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்!
ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும். தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் என்று பதிவிட்டுள்ளார்.