செய்தியாளர்: வெ.செந்தில்குமார்
அரியலூர் மாவட்டம் வஞ்சினாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சநாதன் என்பவரின் மகள் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 20.11.2023 அன்று தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர், தான் சென்னையில் உள்ள வங்கி ஒன்றில் இருந்து பேசுவதாகவும், உங்கள் மகளுக்கு கல்விக் கடனாக 10 லட்சம் ரூபாய் தருவதாகக் கூறி, மகளின் விவரங்களை வாட்ஸ்ஆப் மூலம் பெற்றுக் கொண்டுள்ளார்.
இதையடுத்து கல்விக் கடன் பெறுவதற்கு வருமான வரி ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் அல்லது கடன் தொகை முன் பணம் கட்ட வேண்டும் எனக் கூறி பல்வேறு தவணைகளாக 2 லட்சத்து 66 ஆயிரத்து 40 ரூபாய் பணத்தை பெற்று ஏமாற்றியுள்ளனர். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பஞ்சநாதன், அரியலூர் இணைய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சென்னையைச் சேர்ந்த வினோத்குமார், சிவரஞ்சனி, சுரேகா, கிரிஜா, விஷால் ஆகிய 5 பேரைக் கைது செய்தனர்.
இதையடுத்து அவர்களிடமிருந்த 5 செல்போன்கள் 5 வயர்லெஸ் போன்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் விசாரணையின் அடிப்படையில் தலைமறைவாக உள்ள ராஜேஷ் என்பவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்கள் மீது திண்டுக்கல், சென்னை, மதுரை ஆகிய மாவட்டங்களிலும் பல்வேறு புகார்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.