செய்தியாளர்: வெ.செந்தில் குமார்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தென்வீக்கம் கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். விவசாயியான இவர், தனது 20 சென்ட் நிலத்தில் 150 தேக்கு, 70 மகாகனி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட மரங்களை நட்டு பராமரித்து வருகிறார். இந்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த வெங்கடேசனுக்கும், ரமேஷ்க்கும் நிலம் தொடர்பான வழித்தகராறில் பிரச்னை ஏற்பட்டு முன் விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன் மற்றும் அவரது தாயார் இந்திராணி ஆகியோர் ரமேஷின் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள 200-க்கும் மேற்பட்ட தேக்கு மற்றும் மகாகனி மரங்களை அடியோடு வெட்டி சாய்த்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ரமேஷ் அங்கு தனது நிலத்தில் மரம் முழுவதும் வெட்டி சாய்க்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் ரமேஷ் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.