அண்ணாமலை, அமித் ஷா, இபிஎஸ் எக்ஸ் தளம்
தமிழ்நாடு

“மாநில தலைவர் போட்டியில் நான் இல்லை” - முதல்முறையாக உடைத்து பேசிய அண்ணாமலை! கூட்டணிக்கு பச்சைக்கொடி!

”தமிழக பாஜக தலைவருக்கான போட்டியில் தான் இல்லை” என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார் தற்போதைய மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

rajakannan

2026 தேர்தல் - சூடுபிடிக்கும் கூட்டணி பேச்சுகள்

தமிழ்நாட்டில் அடுத்த சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வருடத்திற்கு மேல் இருக்கும் நிலையில், தற்போதே தேர்தல் களத்திற்கான சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. கூட்டணிக் கணக்குகளை போட்டு அரசியல் கட்சிகள் காய்களை நகர்த்தி வருகின்றன. திமுக கூட்டணியை பொறுத்தவரை தற்போது வரை எவ்வித சலசலப்பும் இல்லை. காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் தொடர்கின்றன. நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இன்றுவரை தனித்து போட்டி என்று சொல்லி வருகிறார். மீதமுள்ள மூன்று தரப்புகள் அதிமுக, பாஜக, தவெக. இதில் கடந்த தேர்தலில் பாஜகவும் அதிமுகவும் தனித்துப் போட்டியிட்டார்கள்.

ஒத்து வராத தவெக - அதிமுக கூட்டணி பேச்சுகள்!

தவெக தலைவர் விஜய் விக்கிரவாண்டி கூட்டத்திலேயே கூட்டணி ஆட்சி என்று அறிவித்தவர். அதனால், தவெக யாருடன் கூட்டணி வைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இதற்கிடையில்தான் தவெக - அதிமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக பேச்சு அடிபட்டு பின்னர் அது முடியாமல் போனதாக கூறப்பட்டது. பின்னர் திடீர் திருப்பமாக அதிமுக - பாஜக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுவதாக பேச்சுகள் மெல்ல உருவானது.

அமித் ஷா, இபிஎஸ்

மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுகள்

சில வாரங்களுக்கு முன்பு கூட பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் தெளிவாக கூறி வந்தனர். ஆனால், கடந்த சில தினங்களில் ஜெட் வேகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பான பேச்சுகள் முன்னிலைக்கு வந்தது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் டெல்லி பயணம் சென்ற இருக்கிறார்கள். பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித்ஷாவை சந்தித்த பிறகு கூட்டணி உறுதியானதாகவே பேசப்பட்டது. சந்திப்பு நடக்கும்போதே அமித்ஷா எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தும் அதனை உறுதி செய்யும் வகையில் இருந்தது. இருப்பினும், அதிமுக தரப்பில் அதனை வெளிப்படையாக மறுத்து வந்தார்கள். அதற்கு காரணமாக அதிமுக தரப்பில் வைக்கப்பட்ட நிபந்தனைகள் இன்னும் ஏற்கப்படவில்லை என்று கூறப்பட்டது. அதாவது, மாநிலத் தலைவரை மாற்ற வேண்டும் என்பதும் அதில் ஒரு முக்கிய நிபந்தனையாக இருந்ததாக தெரிகிறது.

நான் போட்டியில் இல்லை - அண்ணாமலை ஓபன் டாக்

இத்தகைய சூழலில்தான் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பதிலாக புதிய தலைவர் நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் கசியத் தொடங்கி பின்னர் அந்த தகவல் முன்னிலை விவாதம் ஆனது. பாஜக மாநில தலைவருக்கான போட்டியில் நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்ட யாரெல்லாம் இருக்கிறார்கள் என விவாதங்கள் நடந்தன. இருப்பினும் அண்ணாமலை இதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்தார்.

அண்ணாமலை

இந்நிலையில், மாநில தலைவருக்கான போட்டியில் தான் இல்லை என்று வெளிப்படையாக கூறியுள்ளார் அண்ணாமலை. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கட்சி எப்போதும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடியவன் நான். புதிய மாநிலத் தலைவருக்கான போட்டியில் நான் இல்லை. பாஜகவில் புதிய தலைவர்களை தேர்ந்தெடுக்க போட்டியெல்லாம் வைக்க மாட்டார்கள். மூத்த தலைவர்கள் முடிவு செய்து தேர்ந்தெடுப்பார்கள். அதனால்தான் நான் போட்டியில் இல்லை என்று சொல்கிறேன். புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும்போது நிறைய பேசுவோம்” என்றார்.

அத்துடன், ”பாஜக மாநில தலைமையை மாற்றினால்தான் கூட்டணி அமையும் என்ற அதிமுகவின் நிர்பந்தம்தான் காரணமா” என்ற கேள்விக்கு ”அதற்கு பதிலளிக்க விரும்பவில்லை” என்று பதிலளித்தார்.

தமிழிசை கருத்து

முன்னதாக, பாஜக மாநில தலைவர் தேர்தலில் போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்குப் பதிலளித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “பாரதிய ஜனதா கட்சியில் தேர்தல் நடைமுறை என்பது கிடையாது; மேலிடம் முடிவு செய்வதை நாங்கள் பின்பற்றுவோம்” எனத் தெரிவித்தார். அண்ணாமலையே வெளிப்படையாக தெரிவித்துள்ள நிலையில், புதிய மாநில தலைவர் நியமிக்கப்பட உள்ளது உறுதியாவதோடு, அதிமுக பாஜக இடையிலான கூட்டணியில் கிட்டதட்ட உறுதியானதுபோல் தெரிகிறது. இதனால், விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தமிழிசை சௌந்தரராஜன்

அண்ணாமலை உடனான மோதல் பின்னணி!

முன்னதாக, கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் சேர்ந்தே அதிமுக கூட்டணி அமைத்தே தேர்தலைச் சந்தித்தது. பாஜககூட அந்த தேர்தலில் 4 எம்.எல்.ஏக்களைப் பெற்றது. இருப்பினும், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மாநிலத் தலைவர்கள் அண்ணாமலைக்கும் அதிமுகவுக்கும் இடையே மோதல் போக்கு வளர்ந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஊழல் குற்றவாளி என தெரிவித்தது, அண்ணா பற்றிய கருத்து என அடுத்தடுத்த விவகாரங்களில் அந்த மோதல் உச்சத்தைத் தொட்டது. பின்னர், அண்ணாமலையை மாற்ற வேண்டும் என அதிமுக தரப்பில் கோரிக்கை வைக்கும் அளவிற்கு சென்றது. இருப்பினும், அண்ணாமலை மாற்றப்படவில்லை. இதனால் கூட்டணி உடைந்தது. கூட்டணி உடைந்த பிறகும் அதிமுகவினர் வெளிப்படையாக பாஜகவை தாக்கிப் பேசினர். தங்கள் தோல்விக்கு காரணம் பாஜக உடனான கூட்டணி என்று ஜெயக்குமார் உள்ளிட்ட மூத்த தலைவர்களே குற்றம்சாட்டி பேசினார்கள். இனிமேல் பாஜக உடன் கூட்டணியே இல்லை என எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பேசி வந்தனர். இத்தகைய சூழலில்தான் அண்ணாமலை வெளியேறும் நிலையில், மீண்டும் கூட்டணி மலர வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளது. மாநில தலைவர் பதவி பறிக்கப்பட்டாலும் எல்.முருகனைப்போல மத்திய இணை அமைச்சர் பொறுப்பு அண்ணாமலைக்கு கொடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது