அரசியலில் தான் மிகவும் ஆக்ரோஷமானவன்தான், இதற்காக பெருமைப்பட்டாலும், ஒருகட்டத்தில் நிறையவே இழந்திருக்கிறேன் என, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதன் பின்னணி என்ன என்பதை இப்போது பார்க்கலாம்....
பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்ட நிலையில், அந்த சமயத்தில் பேட்டி அளித்த ஆடிட்டர் குருமூர்த்தி, “பாஜக தலைவராக அண்ணாமலை இருந்தபோது, கொஞ்சம் வேகமாக செயல்பட்டார். ஒருவேளை அவரது வேகமேகூட அவர் மாற்றப்பட காரணமாக இருக்கலாம்” என்று கூறியிருந்தார்.
இந்தப் பின்னணியில்தான் அண்ணாமலை கொடுத்த ஒரு பேட்டியின் காணொளியை அவருடைய ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பரப்பிவருவது கவனம் பெறுகிறது. ”ஆக்ரோஷமாக இருந்தால்தான் பாஜகவை தமிழ்நாட்டில் கட்டியெழுப்ப முடியும் என நம்புகிறேன். தனக்கு அது பெருமைதானே தவிர, எப்போதும் அந்த கருத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை” என்று அந்தப் பேட்டியில் கூறியுள்ளார் அண்ணாமலை.
இந்த ஆக்ரோஷம் காரணமாக அதிமுக கொடுத்த அழுத்தத்தால்தான், தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டியிருந்ததா என்ற கேள்விக்கு, “அது பாஜக தலைமையின் முடிவு என்றும், அதேநேரம் நீண்டகால அரசியல் பயணத்தில் நிரந்தர நண்பரும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை” எனவும் கூறியுள்ளார்.
அதேபோல், அதிமுக ஒன்றை ஆதரிப்பதற்காகவோ அல்லது எதிர்க்கிறது என்பதற்காகவோ, தானும் அதே முடிவை எடுக்க முடியாது. அதிமுக நீட், மும்மொழிக் கொள்கைக்கு எதிர்க்கும் நிலையில், தான் இவைகளை 100 சதவீதம் ஆதரிக்கிறேன் எனக் கூறியுள்ளார். மேலும், அரசியலில் எப்போதும் ஆக்ரோஷமாகவே இருக்கவே விரும்பும் தான், அதிமுகவுடன் எல்லா வகையிலும் உடன்பட சாத்தியமில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.