காவல்துறையை விட்டு பாஜகவில் இணைந்த அண்ணாமலை, துணைத் தலைவர் முதல் மாநிலத் தலைவர் வரை உயர்ந்தார். அவருடைய தலைமையில் தனியாக பாஜக 11% வாக்கு பெற்ற பின்னர், அதிமுக கூட்டணிக்காக பதவி விலகினார். அதற்குபிறகு பாஜக வாக்கு 3% ஆக குறைந்தது. தன்னை புறக்கணித்ததாகக் கூறி நிதின் நபினுக்கு அண்ணாமலை விலகல் கடிதத்தை கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான கே. அண்ணாமலை, காவல்துறையிலிருந்து விலகி அரசியலில் இணைந்தார். ஆகஸ்ட் 2020 பாரதிய ஜனதா கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்த அவர், ஆகஸ்ட் 2020 – ஜூலை 2021 இடைவெளியில் தமிழக பாஜகவின் மாநிலத் துணைத் தலைவராக பதவிவகித்தார். பின்னர் ஜூலை 2021 – ஏப்ரல் 2025 தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
அவருடைய தலைமையில் 2024 மக்களவைத் தேர்தலில் தனி அணி அமைத்து போட்டியிட்ட பாஜக, 11 சதவீத வாக்குகளைப் பெற்றது. ஆனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்காக பாஜக மாநில தலைவர் பொறுப்பிலிருந்து அண்ணாமலை விலகினார். அதற்கு பிறகு பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து அண்ணாமலை மாற்றப்பட்ட பிறகு, அதிமுகவுடன் சேர்ந்து வலுவான கூட்டணி அமைத்தும்கூட பாஜகவால் 3 சதவீதம் வாக்குகளை மட்டுமே பாஜகவால் பெற முடிந்தது. பாஜகவின் வாக்குவங்கி முன்பிருந்ததை விட சுருங்கியது.
தமிழக அரசியலில் இளைஞர்களால் பெரும் அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ள நிலையில், பாஜகவில் தனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று அண்ணாமலை கருதுவதாகவும், அதனாலே துடிப்பான அரசியலை சுதந்திரமாக முன்னெடுக்க தனிக்கட்சி தொடங்குவதே வழி என திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. விஜய், உதயநிதி வரிசையில் தன்னையும் முன்னிறுத்திக்கொள்ள அண்ணாமலை முயற்சிப்பதாக கூறப்படும் நிலையில் அவரை எப்படியாவது பாஜகவில் தக்கவைக்க வேண்டும் என்று பாஜக டெல்லி தலைமை முடிவுசெய்துள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில் தான் தமிழ்நாடு பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகினார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய தகவலின் படி, தமிழக பாஜகவில் தான் ஒதுக்கப்பட்டதாக தேசிய தலைவர் நிதின் நபினிடம் அண்ணாமலை கடிதம் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஒதுக்கப்பட்டதற்கான பின்னணியை குறிப்பிட்டு நிதின் நபினிடம் கடிதம் அளித்த அண்ணாமலை, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் படுதோல்விக்கான காரணம் குறித்தும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனிக்கட்சி அமைப்பாரா? அல்லது அவருடைய அரசியல் நகர்வு எப்படி இருக்கும் என்பது தமிழக அரசியல் அடுத்த பரபரப்பை உண்டாக்கியுள்ளது.