கேரளாவை உலுக்கிய ஒன்றரை வயது குழந்தையின் கொடூர மரணம்.. வளர்ப்பு தந்தை மற்றும் பெற்ற தாய் கைது!
கேரளாவை அதிர வைத்துக்கொண்டிருக்கிறது ஒன்றரை வயது குழந்தையின் மரணம். இதை மரணம் என்பதை விட கொடுமையான சித்ரவதைகளின் உச்சம் என்று கூடச் சொல்லலாம். அந்த அளவு கொடுமைகளை அனுபவித்த அக்குழந்தையின் பெயர் அர்ஷத்.
கேரள மாநிலம் நெடுமாங்காடு என்ற ஊரில், பிறந்து 18 மாதங்களே ஆன இக்குழந்தை அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலானது. இக்குழந்தையின் இரு கைகளிலும் கட்டுகள் போடப்பட்ட நிலையில் தாய் அகிலா குழந்தையை துக்கி வந்தார். இதுபற்றி ஒருவர் அகிலாவிடம் கேட்டபோது, சைக்கிளில் இருந்து கீழே விழுந்துவிட்டதாக அவர் கூறினார். அக்குழந்தை விரைவில் குணமடைய வேண்டும் என்று அனைவரும் பிரார்த்தனை செய்து பதிவிட்டனர்.
இந்நிலையில்தான், கடந்த 29ஆம் தேதி, குழந்தை அர்ஷத் சாப்பிட்டபோது, தொண்டையில் உணவு சிக்கிக்கொண்டு மயங்கிவிட்டதாக தாய் அகிலா panavoor மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், காவல்துறைக்கு தகவல் கூறினர். காரணம், அந்த பிஞ்சு உடலில் ஐம்பதுக்கும் அதிக இடங்களில் காயங்கள் இருந்தன. உடல் முழுவதும் சிகரெட்டால் சுட்ட வடுக்கள், காயங்கள், ஆனால், அந்த குழந்தை உயிரிழந்துவிட்டது. கைகள், கால்களில் எலும்பு முறிவுகள், குழந்தையின் பிறப்புறுப்பு உட்பட உடல் முழுவதும் காயங்கள், ரத்தக்கட்டுகளாக இருந்தன. சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை இறந்தேவிட்டது. உடற்கூராய்வில், அக்குழந்தையின் உள்ளுறுப்புகளிலும் காயங்களும், ரத்தக்கசிவுகளும் இருந்துள்ளன. இதுபற்றிய விசாரணையில்தான் அதிர்ச்சிகர உண்மைகள் தெரியவந்தன.
அகிலா கருவுற்றிருந்த சமயத்தில் அவரது கணவர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். அதன் பின்னர் அஷ்கர் என்பவருடன் அகிலா சேர்ந்து வாழ ஆரம்பித்தார். பனாவூரில், நெல்லிக்குன்னு என்ற இடத்தில் வாடகை வீட்டில் இவர்கள் வசித்தனர். முதல் கணவரின் குழந்தை என்பதால் அர்ஷத் பிறந்தது முதலே அந்தக்குழந்தையை அஷ்கர் துன்புறுத்தி வந்துள்ளார். குழந்தையை அடிப்பதும், துக்கி வீசுவதும், சிகரெட்டால் சுட்டு காயப்படுத்தும்போதும் தாய் அகிலா அதனை தடுக்காமல் அமைதியாக இருந்துள்ளார். குழந்தையின் நிலையை கண்டதும், அகிலாவின் தாய் மற்றும் முதல் கணவரின் குடும்பத்தினர் அந்த குழந்தையை தங்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுள்ளனர். ஆனால், அகிலா அதனை மறுத்து தன்னுடனேயே வைத்துக்கொண்டுள்ளார். இந்நிலையில்தான் குழந்தை உயிரிழந்துள்ளது. குழந்தையின் தந்தை தரப்பு குடும்பம் அளித்த புகாரின்பேரில், வளர்ப்புத்தந்தை அக்ஷர் கைது செய்யப்பட்டார். தமிழ்நாட்டில் நடன நிகழ்ச்சிக்காக சென்றிருந்த அகிலாவும் கைதுசெய்யப்பட்டார்.
அக்ஷரை கைது செய்தபோது, ஊர்மக்கள் கொந்தளிப்புடன் அவரை விரட்டிச்சென்று தாக்க முயன்றனர். பச்சிளம் குழந்தைக்கு இத்தனை சித்ரவதைகளை செய்த அக்ஷருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் ,பெற்ற குழந்தையை சித்ரவதை செய்வதை கண்டும் காணாமல், துணையாக இருந்த தாய் அகிலாவுக்கும் கடும் தண்டனை விதிக்க வேண்டும் என்றும் கேரளாவில் வலிமையான குரல்கள் எழுந்துள்ளன.

