அண்ணாமலை, டிடிவி தினகரன் எக்ஸ்
தமிழ்நாடு

சென்னை| அண்ணாமலை-டிடிவி திடீர் சந்திப்பு... மீண்டும் என்டிஏ கூட்டணிக்கு திரும்புவாரா தினகரன்?

என்டிஏ கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் விலகிய நிலையில், இன்று பாஜக முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை டிடிவி தினகரனை சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் களத்தில் பரபரப்பாக பேசுபொருளாகியுள்ளது.

Uvaram P

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் உள்ள டிடிவி தினகரன் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து பேசியது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. என்டிஏ கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் விலகிய நிலையில், மீண்டும் அவரை கூட்டணிக்குள் இணைக்க பேச்சுவார்த்தைகள் நடந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நேரத்தில் மீண்டும் வலுப்பெறுகிறதா என்டிஏ கூட்டணி? என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், வலுவிழந்த தங்கள் கூட்டணியை வலுப்படுத்தும் நோக்கில் பாஜகவும், அதிமுகவும் முனைப்பு காட்டி வருகின்றன. 2024 மக்களவைத் தேர்தலின்போது அதிமுக தனி அணி அமைத்து போட்டியிட்ட நிலையில், பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக, ஓபிஎஸ் அணி உள்ளிட்ட கட்சிகளோடு கூட்டணி அமைத்து போட்டியிட்டது பாஜக. அனைத்து இடங்களிலும் தோல்வியே மிஞ்சினாலும், குறிப்பிடத்தகுந்த அளவில் வாக்குகளைப் பெற்றது.

அண்ணாமலை

தொடர்ந்து, 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மனக்கசப்புகளைக் களைந்து அதிமுகவும் - பாஜகவும் கூட்டணி வைத்தன. அதிமுகவுடன் நெருடல் இருந்தும் பாஜக என்ற குடையின் கீழ், அமமுக டிடிவி தினகரனும், ஓபிஎஸ்ஸும் தொடர்வதாக அறிவித்தனர். இந்த நிலையில்தான், என்டிஏ கூட்டணியில் இருந்து இருவருமே விலகுவதாக அறிவித்திருந்தனர். டெல்லி பாஜக தலைமையிடம் இருந்து உரிய அங்கீகாரமோ, மரியாதையோ இல்லாததாலே இந்த விலகல் என்று பேசப்பட்டது. அதனை வலுப்படுத்தும் வகையில், செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், பாஜக தங்களுக்கு செய்ததை உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை என்று உடைத்து பேசினார்.

அவரைத் தொடர்ந்து, கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் டிடிவி தினகரன். இந்த முடிவுக்கு பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்றிருக்கும் நயினார் நாகேந்திரனின், செயல்பாடு மற்றும் மனநிலைதான் முக்கிய காரணம் என்று விமர்சித்தார். அண்ணாமலை தலைவராக இருந்தபோது, அரவணைத்து கொண்டு சென்றதாகவும், நயினாரிடம் அதுபோன்ற போக்கு இல்லை என்றும் சாடினார் டிடிவி தினகரன். இதற்கிடையே, டிடிவி மற்றும் ஓபிஎஸ் இருவரும் கூட்டணியில் இருந்து விலகிய தங்களின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் அண்ணாமலை.

O.Pannir selvam, Annamalai, TTV.Thinakaran

இப்படி கூட்டணி வலுவிழந்ததைத் தொடர்ந்து, தொண்டர்கள் பேச்சைக் கேட்டு கூட்டணி முடிவை எடுப்போம் என்றார் டிடிவி தினகரன். அதோடு, விஜய் தலைமையில் தனி அணி அமையும்.. அவர் அணியில் அவரை தலைமையாக ஏற்று இணைவதில் என்ன தவறு என்பது வரை டிடிவி பேசியது அரசியல் களத்தின் போக்கை மாற்றிப்போடுவதாக பார்க்கப்பட்டது.

இப்படியான சூழலில்தான், சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீட்டிற்கு சென்ற அண்ணாமலை, டிடிவியிடம் சுமார் ஒன்றரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது.

இந்த சந்திப்பில், மீண்டும் என்டிஏ கூட்டணியில் இணைய வேண்டும் என்று கூறியதாகவும், விலகல் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, டிடிவி மற்றும் ஓபிஎஸ்ஸின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துமாறு தேசிய தலைமை அறிவுறுத்தியதன் பேரிலேயே இந்த சந்திப்பு நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அண்ணாமலை-டிடிவி சந்திப்பு

முன்னதாக, 2021 சட்டமன்ற தேர்தலில் தன் தலைமையில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை இணைத்து தனி அணியாக போட்டியிட்ட டிடிவி, 2024 தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்தார். பாஜக மாநில தலைவராக அண்ணாமலை இருந்தபோது, இருவருக்குமான நட்பு வலுப்பெற்றதன் பேரில் இந்த கூட்டணி இணைப்பு நடந்தது.

இந்த நிலையில், சமீபத்தில் நயினாருடன் ஏற்பட்ட மனக்கசப்பு உள்ளிட்டவைகளால் என்டிஏ கூட்டணியில் இருந்து விலகினார் டிடிவி. செய்தியாளர் சந்திப்பில் அவரே இதை உறுதி செய்து பேசினார். தென்மாவட்ட அரசியலில் டிடிவி மற்றும் ஓபிஎஸ்ஸின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கும் பாஜக தேசிய தலைமை, இருவரையும் மீண்டும் கூட்டணிக்குள் கொண்டுவர தீவிர முயற்சியை மேற்கொள்வதாக கூறுகின்றனர் அரசியல் திறனாய்வாளர்கள். அண்ணாமலையின் அழைப்பை ஏற்று டிடிவி தினகரன் மீண்டும் என்டிஏ கூட்டணிக்குள் வருவாரா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்.