Aamirkhan
AamirkhanAamirkhan

"கோடியில் சம்பாதிக்கும் உங்களுக்கு, கொஞ்சம் கூடவா சுய மரியாதை இல்லை?" - அமீர் கான்

இப்போது ஸ்டார்களின் உதவியாளர், ஓட்டுனர்களுக்கு சம்பளத்தை தயாரிப்பாளர்கள் தான் கொடுக்கிறார்கள் என்பதை தாண்டி ஜிம் டிரெய்னர், படப்பிடிப்பில் வந்து சமைத்து தருபவர்கள் என அந்தப் பட்டியல் நீள்கிறது.
Published on

பிரபல பாலிவுட் நடிகர் ஆமீர்கான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சினிமாவின் இன்றைய நிலை பற்றியும், தயாரிப்பு செலவுகள், ஓடிடி, நடிகர்கள் எனப் பலவற்றை பற்றி கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதில் நடிகர்களின் தனிப்பட்ட செலவுகளுக்கு தயாரிப்பாளர் பணம் செலவு செய்வது குறித்து பேசிய காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இது பற்றி பேசிய ஆமீர்கான் "ஒரு ஸ்டார், ஸ்டாராக இருப்பதை நானும் ரசிக்கிறேன். ஆனால் அதன் எல்லை என்ன என்பதற்கு அளவு இருக்கிறது. அவர்களின் சொந்த தேவைகளுக்கு தயாரிப்பாளர்களை தொந்தரவு செய்கிறார்கள். இவற்றை கேள்விப்படும் போது மிகவும் வருத்தமடைகிறேன்.

Aamirkhan
AamirkhanAamirkhan


நான் இந்த துறைக்கு வந்த போது ஒரு வழக்கம் இருந்தது. ஒரு ஸ்டார் வருகிறார் என்றால், அவரது ஓட்டுநர் மற்றும் உதவியாளருக்கான பணத்தை தயாரிப்பாளர் தருவார். அந்த உதவியாளரும், ஓட்டுனரும் எனக்கு பணியாற்றுகிறார்கள், அவர்களுக்கு ஏன் தயாரிப்பாளர் பணம் தர வேண்டும்? என் மகனின் பள்ளி கட்டணத்தை கூட அவரே காட்டுவாரா என்ன? 

நான் சுய சார்புடைய நபர். தயாரிப்பாளர் என்பவர் அந்தப் படம் சார்ந்த செலவுகளுக்கு மட்டுமே பணம் கொடுக்க வேண்டும். மேக்கப் மேனுக்கு, சிகை அலங்காரத்திற்கு, ஆடை வடிவமைப்பாளருக்குக்கு பணம் கொடுங்கள், அவர்கள் படத்திற்காக பணியாற்றுகிறார்கள். ஆனால் என் ஓட்டுனருக்கு, உதவியாளருக்கு தயாரிப்பாளர் ஏன் பணம் கொடுக்க வேண்டும்? அவர்கள் எனக்காக பணிபுரிகிறார்கள், நான் நன்றாக சம்பாதிக்கிறேன், அவர்களுக்கு நான் பணம் கொடுத்துக் கொள்வேன். எனவே என் ஆரம்ப காலங்களிலேயே நான் என்னுடைய உதவியாளர் மற்றும் ஓட்டுனருக்கு தயாரிப்பாளரிடம் பணம் கேட்க மாட்டேன் என்ற விதியை நிர்ணயித்துக் கொண்டேன், 37 வருடங்களாக அதை பின்பற்றுகிறேன்.

Dangal
DangalAamirkhan

ஆனால் இப்போது ஸ்டார்களின் உதவியாளர், ஓட்டுனர்களுக்கு சம்பளத்தை தயாரிப்பாளர்கள் தான் கொடுக்கிறார்கள் என்பதை தாண்டி ஜிம் டிரெய்னர், படப்பிடிப்பில் வந்து சமைத்து தருபவர்கள் என அந்தப் பட்டியல் நீள்கிறது. இவர்களை பயன்படுத்தக் கூடாது என நான் சொல்லவில்லை. ஆனால் அவர்களுக்கு ஏன் தயாரிப்பாளர் பணம் தர வேண்டும். கோடி கோடியாய் சம்பாதிக்கும் உங்களுக்கு, கொஞ்சம் கூடவா சுய மரியாதை இல்லை? இது மிக வினோதமாக இருக்கிறது. இது சினிமா துறையை பாதிக்கும் கவலைக்குரிய விஷயம்.

ஒரு நடிகராக உடலை ஃபிட் ஆக வைத்துக் கொள்வது அடிப்படை விஷயம். அதுவே இப்போது `டங்கல்' போன்ற ஒரு படத்தில் மல்யுத்தம் கற்க வேண்டும் என்றால், அதைக் கற்க தயாரிப்பாளர் பணம் கொடுக்கலாம். ஆனால் உங்கள் சமையல்காரருக்கு பணம் கொடுக்க வேண்டும் என்பது சரியானதல்ல. விட்டால் அவர்கள் வீட்டு பணியாட்கள் சம்பளம், டிவி பில் எல்லாவற்றையும் சேர்ப்பார்கள் போல. இது அவமானகரமானது. இன்றளவும் நடிகர்கள் தங்களது தயாரிப்பாளர்களிடம் இப்படி அநியாயமாக நடந்து கொண்டு தான் இருக்கிறார்கள்." எனப் பேசி இருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com