யார் அந்த சார் புதிய தலைமுறை
தமிழ்நாடு

அதிகாரிகளிடம் மீண்டுமொரு முறை உறுதிப்படுத்திய மாணவி... அழுத்தமாக எழும் ‘யார் அந்த சார்?’ கேள்வி!

“சார் ஒருவரிடம் ஞானசேகரன் தொடர்பு கொண்டார். அந்த சாருடன் இருக்குமாறு அவர் என்னிடம் கூறினார்” என பாதிக்கப்பட்ட மாணவி மீண்டும் உறுதிப்படுத்தியதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஜெ.அன்பரசன்

அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் தேதி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து சிநேக பிரியா ஐ.பி.எஸ், அய்மான் ஜமால் ஐ.பி.எஸ், பிருந்தா ஐ.பி.எஸ் ஆகிய அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை

இதனிடையே FIR வெளியாகி மாணவி தெரிவித்த "யார் அந்த சார்?" என்ற கேள்விகளோடு அதிமுக, பாஜக, தவெக உள்ளிட்ட கட்சியினரும். பல்வேறு இயக்கங்களைச் சார்ந்தவர்களும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். FIR வெளியான "யார் அந்த சார்?" என்ற கேள்வியானது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, அண்ணா பல்கலைக்கழகம் வளாகத்தின் உள்ளே ஆய்வில் ஈடுபட்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பதிவாளர் மற்றும் சில பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவியிடமும் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது மாணவியிடம் நடத்திய விசாரணையின் போது, “சார் ஒருவரிடம் ஞானசேகரன் தொடர்பு கொண்டார். அந்த சாருடன் இருக்குமாறு அவர் என்னிடம் கூறினார்” என பாதிக்கப்பட்ட மாணவி மீண்டும் உறுதிப்படுத்தியதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தொலைப்பேசி அழைப்பு வந்த போது, “ ‘நான் மிரட்டி விட்டு, வந்துவிடுவேன்’ என ஞானசேகரன் என்முன்னே பேசினார். வேறு ஒரு சாரிடமும் என்னை இருக்க கூறியதாக கூறினார்” என மாணவி மீண்டும் சிறப்பு புலனாய்வு குழுவிடம் மாணவி தெரிவித்துள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஞானசேகரன்

மேலும், சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையில் ஞானசேகரின் செல்போனில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆபாச வீடியோக்களை ஆய்வு செய்த போது பழைய வீடியோ ஒன்றில் ஞானசேகரோடு, அவரது கூட்டாளியான திருப்பூரை சேர்ந்த குற்றவழக்குகளில் தொடர்புடையவர் ஒருவர் இருப்பதையும் கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து வீடியோவில் இருந்த நபர் குறித்த பின்னனியை கண்டறிய, அவரையும் பிடித்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

அந்த வீடியோக்களில் ஞானசேகரனால் பாதிக்கப்பட்ட மேலும் 4 பெண்களை சிறப்பு புலனாய்வு குழு கண்டறிந்துள்ளனர். அவர்களிடம் புகாரை பெற்று விசாரணை நடத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும் வீடியோவில் உள்ள பெண்கள் யார் யார் எனவும் விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதனிடையே, கோட்டூர்புரம் பகுதியில் உள்ள ஞானசேகரின் வீட்டில் சிறப்பு புலனாய்வு குழுவினர் இன்று காலை சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடைபெற்றுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை

ஏற்கனவே ஞானசேகரை பிடித்து கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீசார் சோதனை மேற்கொண்டதுடன், அவர் வீட்டில் இருந்து சம்பவதன்று பயன்படுத்திய தொப்பி போன்றவற்றை பறிமுதல் செய்து இருந்தனர். இந்த நிலையில், இன்று காலை சிறப்பு புலனாய்வு குழு சோதனை மேற்கொண்டு பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

யார் அந்த சார்? என்ற கேள்வி தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் "சிறப்பு புலனாய்வு குழு" அதிகாரிகளிடம் "அந்த சார்" குறித்து பாதிக்கப்பட்ட மாணவி மீண்டும் உறுதிபடுத்தி இருப்பது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.