சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23ஆம் தேதி கல்லூரி மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ள நிலையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக ஞானசேகரன் என்பவரை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கிற்கான FIR நகலானது சமூக வலைதளங்களில் வெளியானது. இது மக்களிடையே கொந்தளிப்பையும், பலதரப்பினரிடையே கண்டனமும் எழுந்தது. பின் அந்த பக்கத்தை காவல்துறை முடக்கியது. மேற்கொண்டு அதை யாரும் பகிர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் செய்தது.
இந்நிலையில் இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், “FIR காப்பி வெளியானதற்கு காவல்துறை காரணம் அல்ல... தொழில்நுட்ப கோளாறே காரணம்” என்ற தகவலை சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். தவிர சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சட்ட அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் தள பக்கத்தில், “அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாலியல் வன்முறை சம்பவம் தொடர்பாக, சென்னை பெருநகர காவல் துறை துரிதமாக உரிய நடவடிக்கைகளை எடுத்து குற்றவாளியை கைது செய்தது குறித்தும், இந்த சம்பவம் தொடர்பான அனைத்து தகவல்களும் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. மாண்பமை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளவாறு சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டு, இது தொடர்பான விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த வழக்கின் விசாரணையின் போது, இவ்வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை பொது வெளியில் வெளிவந்ததற்கு, இந்த அறிக்கைகளை இணைய வழியில் நிர்வகிக்கும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் (NIC) சி.சி.டி.என்.எஸ் அமைப்பில் இருந்த தொழில்நுட்ப குறைபாடுகளே காரணம் என்பதும், காவல்துறை காரணம் அல்ல என்பதும் விளக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு பற்றிய சென்னை காவல்துறை ஆணையரின் பேட்டி பற்றி தெரிவிக்கப்பட்ட கருத்துக்களைப் பொறுத்தவரை, அகில இந்திய பணிகள் (நடத்தை) விதிகள் 1968-ன்படி கடைபிடிக்கப்படும் நடைமுறைகளின் அடிப்படையில் இதில் எந்த தவறும் இல்லை எனத் தெளிவுபடுத்த உள்ளோம்.” என்று பதிவிட்டுள்ளார்.