பாதிக்கப்பட்ட மாணவி தொடர்பான எஃப்.ஐ.ஆரை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை புதிய தலைமுறை
தமிழ்நாடு

அண்ணா பல்கலை. வன்கொடுமை வழக்கில், பாதிக்கப்பட்ட மாணவியின் தனி விவரங்கள் கசிவு: காவல்துறை நடவடிக்கை!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மாணவியின் FIR நகல் இணைய தளங்களில் வெளியான நிலையில், மாணவிக்கு நீதிகேட்டு எதிர்க்கட்சிகள் தீவிரமாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.

அங்கேஷ்வர்

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் சென்னையை அதிரவைத்தது. அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். காவல்துறையினரும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு வரும் 8ஆம் தேதி வரை நீதிமன்றக்காவல் விதிக்கப்பட்டது. அவர் ஏற்கனவே பல குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுவந்ததும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனிடையே, பாதிக்கப்பட்ட மாணவியின் விவரங்கள் இருந்த FIR நகல் இணையதளங்களில் பரவியது பலரது கண்டனங்களைப் பெற்றது.

பாலியல் வன்கொடுமை, பாலியல் சீண்டல் மற்றும் போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களது விபரங்களை வெளியிடக் கூடாது என்பது சட்டம். அதையும் மீறி வெளியிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படும். ஆனால், தற்போது பாதிக்கப்பட்ட மாணவியின் விபரங்கள் FIRல் பதிவு செய்யப்பட்ட நிலையில், அதன் நகல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஆன்லைனில் பதிவேற்றப்பட்ட FIR விவரங்களை யாரும் பார்க்கவோ, தரவிறக்கம் செய்யவோ முடியாதபடி முடக்கியுள்ளது காவல்துறை.

இந்நிலையில், மாணவிக்கு நீதிகேட்டு எதிர்க்கட்சியினர் கடும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன் அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை காவல்துறையினர் கைது செய்த நிலையில், சாலை மறியலில் அக்கட்சியினர் ஈடுபட்டனர்.

இதேபோல மாணவிக்கு நீதிகேட்டு பாஜகவினரும் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழிசை உள்ளிட்ட பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “சென்னை அண்ணா‌ பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிகழ்வு நெஞ்சைப் பதற வைக்கிறது. இதே நபர் நீண்டகாலமாகப் பல மாணவிகளை பாலியல் ரீதியாக அச்சுறுத்தி வரும் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த குற்றவாளிக்கு உடனடியாகக் கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும்.

பெண்களுக்கெதிரான எந்த வகை குற்றமாக இருப்பினும் அதைப் பொறுத்துக்கொண்டு இருக்காமல், துணிச்சலுடன் வெளிக்கொண்டு வருவதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தித் தருவதும், அனைத்து தளங்களிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான வாழ்வை உறுதி செய்வதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்பதால், பாதிக்கப்பட்ட மாணவி குறித்த விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கையை வெளியே கசிய விட்டிருக்கிறார்கள்.

ஒரு பாலியல் வழக்கில், பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படைக் கடமையிலிருந்து தவறியிருக்கிறது திமுக. இது தனிமனித உரிமைகளுக்கு எதிரானது மட்டுமின்றி, சட்டவிரோதச் செயல்பாடும் ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.