அண்ணா பல்கலை, சென்னை உயர்நீதிமன்றம் எக்ஸ் தளம்
தமிழ்நாடு

அண்ணா பல்கலை விவகாரம்.. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

PT WEB

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி தாக்கல் செய்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, “தமிழக அரசு தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில் இதுவரை நடந்த விசாரணையில், ஒருவர் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக காவல்துறை ஆணையர் தெரிவித்தாரே தவிர, ஒருவர் மட்டுமே குற்றவாளி என்று முடிவுக்கு வரவில்லை. விசாரணை ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழ்நாடு அரசு, உயர்நீதிமன்றம்

மனுதாரர்கள் தரப்பில், “கைது செய்யப்பட்டுள்ள நபர் துணை முதல்வர் உடனும், அமைச்சருடனும் உள்ள புகைப்படத்தைச் சுட்டிக்காட்டி அவர் திமுக நிர்வாகி” என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், “ஒரு நிகழ்வுக்குச் சென்ற போது எடுத்துக்கொண்ட படத்தை வைத்து எப்படி உறுதியான முடிவுக்கு வர முடியும்” என கேள்வி எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கையும், முதல் தகவல் அறிக்கை வெளியானது குறித்த வழக்கையும் விசாரிக்க மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு இடைக்கால இழப்பீடாக 25 லட்சம் ரூபாயை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

chennai police commissioner arun

இத்துடன், “விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ளபோது, அரசு அனுமதி இன்றி செய்தியாளர் சந்திப்பை நடத்தி, வழக்கு குறித்த முக்கிய தகவல்களை பகிர்ந்த காவல்துறை ஆணையருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கலாம்” என அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், “கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை வசூலிக்காமல் மாணவி படிப்பைத் தொடர்ந்து முடிக்க அனுமதிக்க வேண்டும்” என அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டனர்.