அண்ணா பல்கலைக்கழகம் pt web
தமிழ்நாடு

அண்ணா பல்கலைக்கழகம் | மாணவிகள் நலனைப் பாதுகாக்க 16 பேராசிரியர்கள் கொண்ட குழு அமைப்பு!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிகள் நலனை பாதுகாக்க 16 பேராசரியர்களை கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து விசாரிக்க தேசிய மகளிர் ஆணையக்குழுவும் சென்னை வருகிறது.

PT WEB

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்த ஆளுநர் ஆர்.என்.ரவி, பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மாணவிகள் நலனை பாதுகாக்க 16 பேராசிரியர்கள் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக, 40 பாதுகாவலர்களையும் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் சிசிடிவி கேமராக்களை கண்டறிந்து சரி செய்யவும் பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலை, ஆர்.என்.ரவி

மாணவி வன்கொடுமை விவகாரம் குறித்து விசாரிக்க தேசிய மகளிர் ஆணைய குழுவினர் சென்னை வந்துள்ளனர். அவர்கள் நாளை ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். மாணவி வன்கொடுமை வழக்கு குறித்த ஆவணங்கள் உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் காவல்துறை ஒப்படைத்துள்ளது. பாலியல் வன்கொடுமை குற்றம் குறித்த எஃப்.ஐ.ஆர் எங்கிருந்து வெளியானது குறித்த விசாரணையும் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், இவ்விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன், சார் ஒருவருக்கும் நீ ஒத்துழைக்க வேண்டும் என தன்னிடம் கூறியதாக பாதிக்கப்பட்ட மாணவி கூறியிருந்த நிலையில் அது அறித்து அதிமுகவினர் மாநிலமெங்கும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். ஞானசேகரன் கூறிய அந்த சார் யார் என அந்த போஸ்டரில் வினவப்பட்டுள்ளது. நமது மகள்களை பாதுகாப்போம் என்ற வாசகமும் அதில் இடம் பெற்றுள்ளது.