கைது செய்யப்பட்டுள்ள நபர் Pt web
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி | பெண் மீது மயக்க பொடி தூவி கொள்ளை முயற்சி.. ஆந்திர மாநில இளைஞர் கைது!

உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு வங்கியில், பெண் மீது மயக்க பொடி தூவி ரூ. 3 லட்சம் பணத்தை கொள்ளையடிக்க முயன்ற 27 வயதான ஆந்திர மாநில இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

PT WEB

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்த நகையை மீட்பதற்காக வங்கி கட்டிடத்தில் உள்ள ஏடிஎம் மையத்தில் ரூபாய் 3 லட்சம் பணத்தை எடுத்துள்ளார். தொடர்ந்து, வங்கிக்குள் சென்று நகையை மீட்பதற்காக பணம் செலுத்தும் படிவத்தை பூர்த்தி செய்து கொண்டிருந்தபோது அவரை நோட்டமிட்டு வந்த சுமார், 27 வயதான இளைஞர் மகாலட்சுமி மீது திடீரென மயக்க பொடி தூவியுள்ளார்.

உளுந்தூர்பேட்டை

இந்நிலையில், உடலில் அரிப்பு ஏற்பட்டதால் அருகில் இருந்த அவரது உறவினரிடம் பணப் பையைக் கொடுத்த மகாலட்சுமி, மயக்க பொடி தூவப்பட்ட இடத்தை தேய்த்தவாறு பின்னால், திரும்பிப் பார்த்துள்ளார். அப்பொழுது அங்கு, நின்று கொண்டிருந்த இளைஞரை பார்த்து அருகில் இருந்தவர்களிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதையடுத்து, அங்கு இருந்தவர்கள் அந்த இளைஞரை பிடித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, உளுந்தூர்பேட்டை காவல் நிலைய போலீசார் அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தினர். இதன்மூலம், கொள்ளையடிக்க முயன்ற நபர் ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்த 27 வயதான ரவி என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர் மகாலட்சுமி, ஏடிஎம்-லிருந்து பணம் எடுத்தபோதிலிருந்தே அவரைக் கண்காணித்து வந்ததையும் பிறகு, மகாலட்சுமியிடமிருந்து 3 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடிக்க முயன்றதையும் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.