கடை ஊழியரிடம் இருந்து செல்போனை வாங்கும் முதியவர்
கடை ஊழியரிடம் இருந்து செல்போனை வாங்கும் முதியவர் PT WEB
தமிழ்நாடு

வேலூர் | வழக்கறிஞர் எனக்கூறி இளம்பெண்ணிடம் உதவிகேட்ட முதியவர்; அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!

விமல் ராஜ்

செய்தியாளர் - ச.குமரவேல்

வேலூர் மாவட்டம், ஆரணி சாலையில் கவியரசன் என்பவர் செல்போன் சர்வீஸ் மற்றும் விற்பனை கடை வைத்து நடத்தி வருகிறார். ரேணுகா என்ற பெண் அந்தக் கடையில் பணி செய்து வருகிறார்.

இங்கு நேற்று காலை டிப்-டாப் உடை அணிந்து வந்த முதியவர் ஒருவர், "எனது செல்போனில் டச் ஸ்கிரீன் உடைந்து விட்டது, அதை சரிசெய்ய வேண்டும்" எனக் கேட்டுள்ளார். கடையில் பணிபுரிந்த ரேணுகா, கவியரசுக்குக் கால் செய்து விலையை விசாரித்து, 1700 ரூபாய் ஆகும் எனக் கூறியுள்ளார்.

CCTV

இதனையடுத்து அந்த நபர், "கம்பெனியை விட இங்கு குறைவாகத்தான் உள்ளது. ஆனால் எனக்கு உடனடியாக சீரமைத்துத் தர வேண்டும்" என கேட்டுள்ளார். ஆனால் கடையின் உரிமையாளர் உடனடியாக தர முடியாது கொஞ்சம் தாமதமாகும் எனக் கூறியதாகத் தெரிகிறது. அந்த முதியவர் கடையின் விசிட்டிங் கார்டை வாங்கிக்கொண்டு மீண்டும் வருகிறேன் என்று கூறி விட்டுச் சென்றுள்ளார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, மீண்டும் வந்த அந்த முதியவர் “எனது வாகனம் பழுதாகிவிட்டது. அதைப் படம் எடுத்து மெக்கானிக்கிற்கு அனுப்ப வேண்டும்; எனது மொபைலில் கேமரா உடைந்துள்ளது” என கூறி கடையில் பணியாற்றி வரும் பெண்ணிடம் இருந்த செல்போனை வாங்கியுள்ளார்.

இளம்பெண்ணிடம் செல்போன் வாங்கும் முதியவர்

பின்னர் செல்போனின் பாஸ்வேர்டையும் வாங்கிக் கொண்டு, "நான் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறேன். எனது அண்ணன் மருத்துவராக உள்ளார். ஐந்து நிமிடத்துக்குள் வந்து செல்போனை தருகிறேன்” எனக் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அந்த முதியவர் வராததால், சந்தேகமடைந்த அந்த பெண், செல்போன் எண்ணிற்குத் தொடர்பு கொண்ட போது, "switch off" என வந்துள்ளது. அப்போதுதான் அந்த முதியவர் செல்போனை திருடிச் சென்றது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்துக் கடை உரிமையாளர் வேலூர் தெற்கு காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே அந்த சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.