டிடிவி தினகரன் கோப்புப்படம்
தமிழ்நாடு

என்.டி.ஏ கூட்டணியில் மீண்டும் அமமுக.. பியூஷ் கோயலை சந்தித்த டிடிவி தினகரன்!

தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அமைக்கும் நோக்கில் என்டிஏ கூட்டணியில் இணைந்திருப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

PT WEB

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வந்த டிடிவி தினகரன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறி அக்கூட்டணியில் வெளியே வந்தார். இதைத்தொடர்ந்து, தவெகவிற்கு ஆதரவாகவும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து கருத்துக்களைக் கூறிவந்தார். இந்த நிலையில், டிடிவி தினகரன் தவெகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது எனப் பேசப்பட்டு வந்தது.

டிடிவி தினகரன்

2021 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து தனி அணி அமைத்து 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட அமமுக, ஒரு தொகுதியிலும் வெற்றிபெறவில்லை என்றாலும் அதிமுகவின் வெற்றியை தடுக்கும் முக்கிய காரணியாகத் திகழ்ந்தது. அந்தத் தேர்தலில் 2.35 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்ற அமமுக, சுமார் 20 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணியின் குறிப்பாக அதிமுகவின் வெற்றியை தடுத்து அதன் ஆட்சிக் கனவை தகர்த்தது. இந்தக் காரணத்தால்தான், 2026 சட்டமன்றத் தேர்தலில் அந்த கட்சி எந்த கூட்டணியில் இடம்பெறப் போகிறது என்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் தான், கடந்த சில நாட்களாக டிடிவி தினகரன் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையவுள்ளதாகவும், ஜனவரி 23 பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், அவர் பங்கேற்கும் விழாவில் டிடிவி தினகரன் பங்கேற்பார் எனவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் தான், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீண்டும் அதிமுக கூட்டணியில் இணையவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இபிஎஸ், டிடிவி தினகரன்

இது குறித்து அவர் செய்தியாளர்களிடத்தில் பேசுகையில், தமிழ்நாட்டில் மக்கள் விரும்பும் நல்லாட்சியைக் கொடுப்பதற்காக தேசிய ஜனநாயக் கூட்டணியில் இணைந்துள்ளோம். விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை; எங்களுக்குள் இருப்பது பங்காளி சண்டை தான். பழைய விஷயங்களை நினைத்து, தமிழ்நாட்டையும், கட்சியையும் பின்னுக்குத் தள்ளிவிடக் கூடாது. எனவே, ஜெயலலிதாவின் தொண்டர்கள் என்ற முறையில் ஓரணியில் திரண்டு மீண்டும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியைக் கொண்டுவர தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, இன்று காலை பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை டிடிவி தினகரன் சந்தித்துள்ள நிலையில், அங்கு கூட்டணி குறித்தான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.