டிடிவி தினகரன் கோப்புப்படம்
தமிழ்நாடு

பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிய டிடிவி தினகரன்.. அடுத்து என்ன?

பாஜகவின் கூட்டணியில் இருந்த அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவிதினகரன், அந்த உறவை முறித்துக்கொண்டு வெளியேறியிருக்கிறார்.

PT WEB

பாஜகவின் கூட்டணியில் இருந்த அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவிதினகரன், அந்த உறவை முறித்துக்கொண்டு வெளியேறியிருக்கிறார்.

பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிய டிடிவி தினகரன்

நாளுக்குநாள் தமிழக அரசியல் களம் மிக வேகமாகச் சூடு பிடிக்கிறது. இதுவரை பாஜகவின் கூட்டணியில் இருந்த அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவிதினகரன், அந்த உறவை முறித்துக்கொண்டு வெளியேறியிருக்கிறார். பாஜகவுடன் அதிமுக கூட்டணி உறவுகொண்ட நாள் முதலாக படிப்படியாக இற்றுப்போன பாஜக – அமமுக உறவு முடிவுக்கு வந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அடியொற்றி, அடுத்ததாக அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரனும் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். டிடிவி தினகரன், அமமுக பொதுச்செயலாளர் துரோகம் தலைவிரித்தாடுகிறது என டிடிவி தினகரன் கூறியதற்குப் பின், பாஜக அவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் என்ன என்பது வெளிப்பட்டிருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். பன்னீர்செல்வம், தினகரன் இருவருமே அதிமுகவை பழனிசாமியின் பிடியிலிருந்து மீட்க வேண்டும் அல்லது ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று எண்ணி பயணப்பட்டார்களே தவிர, பாஜகவோடு கைகோக்கும் எண்ணம் அவர்களிடம் இயல்பாக இல்லை. 2024 தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து அவர்கள் போட்டியிட்டது முழுக்கவுமே பாஜகவின் அழைப்பின் பேரில் நடந்தது என்கிறார்கள்.

டிடிவி தினகரன், இபிஎஸ்

அப்போது அதிமுகவிடமிருந்து விலகியிருந்த பாஜக, 2024 தேர்தல் முடிவுகளுக்குப் பின் மெல்ல அதிமுகவை நோக்கி நகர்ந்தபோதும், இரு வாக்குறுதிகள் பன்னீர்செல்வம், தினகரன் தரப்புக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. முதலாவது, அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பாஜக இறங்கும்; இரண்டாவது, ஒருவேளை பழனிசாமி இதற்குச் சம்மதிக்காதபட்சத்தில் பாஜக குடையின்கீழ் பன்னீர்செல்வம், தினகரன் இருவருடைய அமைப்புகளும் கூட்டணியில் இடம்பெறும். ஆனால், பாஜகவுடனான கூட்டணியின்போது, பழனிசாமி முன்வைத்த முக்கியமான நிபந்தனையே பன்னீர்செல்வம், தினகரனுக்கு இனி அதிமுகவில் இடம் இல்லை; பாஜக எக்காரணம் கொண்டும் இதை வலியுறுத்தக் கூடாது என்பதுதான். தொடர்ந்து கூட்டணி அளவிலும் இவர்களை அனுமதிக்கக்கூடாது என்று பழனிசாமி பேசியதாகத் தெரிகிறது.

பாஜகவின் திட்டத்துக்குப் பெரும் சறுக்கல்

அதேபோல, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் வருகையின்போதும் பன்னீர்செல்வம், தினகரன் இருவருக்கும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதன் பின்னணியிலும் பழனிசாமி இருப்பதாக எண்ணினார்கள் பன்னீர்செல்வம், தினகரன் தரப்பினர்! இத்தகு சூழலில்தான் கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக முதலில் அறிவித்தார் ஓ.பன்னீர்செல்வம். அவரைச் சமாதனப்படுத்தும் முயற்சியிலோ, மீண்டும் கூட்டணிக்குள் கொண்டுவரும் முயற்சியிலோ பாஜக இறங்காத சூழலில், அடுத்து தினகரனும் வெளியேறியுள்ளார். தமிழகத்தில் ஒரு மெகா கூட்டணியை அமைத்து, ஆட்சியைக் கைப்பற்றவேண்டும் என்ற திட்டத்தில் இருக்கும் பாஜகவின் திட்டத்துக்கு இது பெரும் சறுக்கலாக இருக்கும். ஏனென்றால், அதிமுகவிலிருந்து வெளியேறி அமமுகவை உருவாக்கியபின் தினகரன் பங்கேற்ற இரு தேர்தல்களிலும் அதிமுகவுக்குப் பெரும் பின்னடைவை உண்டாக்கினார் தினகரன். 2019 மக்களவைத் தேர்தலில் 5.5% வாக்குகள், 2021 சட்டமன்றத் தேர்தலில், 2.35% வாக்குகளை மட்டுமே பெற்றாலும், அதிமுகவுக்கு குறைந்தது 20 தொகுதிகளில் தோல்வியை உண்டாக்கினார் தினகரன். வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பன்னீர்செல்வமும் தினகரனோடு கைகோக்கும்போது இந்தச் சேதாரம் மேலும் அதிகமாகும் வாய்ப்புகளே உள்ளன. இதைத் தடுக்கவே எல்லோரையும் ஒருகுடையில் ஒருங்கிணைக்க திட்டமிட்டார் அமித் ஷா. ஆனால், இத்திட்டம் பலன் அளிக்கவில்லை.

ஓபிஎஸ்,விஜய், டிடிவி தினகரன்

சரி, அடுத்தது என்ன?

இப்படி ஒரு கேள்வி எழும்போது, விஜயின் தவெகவை நோக்கியே அரசியல் விமர்சகர்களின் விரல்கள் திரும்புகின்றன. 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக பெரும் தாக்கத்தை உண்டாக்கும் என்பதைச் சமீபத்திய கருத்துக்கணிப்புகள் அடித்துச் சொல்கின்றன. அரசியல் களத்துக்குப் புதிதாக வந்துள்ள தவெகவின் பெரிய பலவீனம், அனுபவம் வாய்ந்த தலைவர்கள் கட்சியில் இல்லை என்பதும், விஜயின் தலைமையை ஏற்கும் கூட்டணிக் கட்சிகள் எதுவும் இதுவரை அமையவில்லை என்பதும்! அதேபோல, முதல்வர் முகமாக தன்னை முன்னிறுத்தும் சூழல் பன்னீர்செல்வம், தினகரன் இருவருக்குமே இப்போது இல்லை. ஆகையால், தேர்தல் அரசியலில் பழுத்த அனுபவம் கொண்ட பன்னீர்செல்வமும், தினகரனும் விஜயுடன் கைகோக்கும் பட்சத்தில், இருதரப்புக்குமே அது பெரும் பலமாக அமையும். மாறும் அரசியல் கள காய்நகர்த்தல்கள் இதை நோக்கித்தான் பயணப்படுகின்றன என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.