அண்ணாமலை, அமித் ஷா, இபிஎஸ் எக்ஸ் தளம்
தமிழ்நாடு

”தேசிய பொறுப்பு” - மாற்றத்தின் பின்னணியில் இபிஎஸ்.. அண்ணாமலை-க்கு அமித் ஷா அளித்த உறுதி!

மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

Prakash J

தமிழக பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புவர்கள், இன்று (ஏப்.11) பகல் 2 மணி முதல் மாலை 4 வரை விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம் என அக்கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து மாநில தலைவர் பதவிக்கு இன்று நடைபெற்ற விருப்ப மனு தாக்கலில் நயினார் நாகேந்திரன் மட்டுமே தாக்கல் செய்த நிலையில், அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாளை அதிகாரப்பூர்வமாக இது அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. இதற்கான நிகழ்வு சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இதற்கிடையே, மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “பாஜகவின் தேசிய பணிகளுக்கு அண்ணாமலையின் திறமை பயன்படுத்தப்படும். தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை அளித்த பங்களிப்பு பாராட்டத்தக்கது” எனத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, அண்ணாமலை மாற்றத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பங்கு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.