தமிழக பாஜக தலைவர் | போட்டியின்றி தேர்வான நயினார் நாகேந்திரன்.. விடைபெறுகிறார் அண்ணாமலை!
தமிழக பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புவர்கள், இன்று (ஏப்.11) பகல் 2 மணி முதல் மாலை 4 வரை விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம் என அக்கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், கட்சியில் குறைந்தது 10 வருடங்கள் அடிப்படை உறுப்பினராக இருக்க வேண்டும் என்று தகுதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மாநில தலைவர் பதவிக்கு இன்று நடைபெற்ற விருப்ப மனு தாக்கலின்போது நயினார் நாகேந்திரன் மட்டும் தாக்கல் செய்திருந்தார். அவருக்காக விதிகளில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் இன்று ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாளை அதிகாரப்பூர்வமாக இது அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. இதற்கான நிகழ்வு சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
முன்னதாக, தமிழக பா.ஜ.கவின் முக்கிய தலைவர்கள் அனைவரும் இணைந்து நயினார் நாகேந்திரனை தலைவராகப் பரிந்துரை செய்து விருப்ப மனு அளித்திருந்தனர். அதன்படி, பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நயினார் நாகேந்திரன் மாநிலத் தலைவராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ள நிலையில், அண்ணாமலை விடைபெறுவதும் உறுதியாகியுள்ளது. 2021 ஜூலை 8-ல் பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட அண்ணாமலை 4 ஆண்டுகள் அப்பொறுப்பில் இருந்தார்.