செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த பல்லலகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் வர்ணம் பூசும் தொழிலாளி பழனி. இவர், தனது இருசக்கர வாகனத்தில் திருப்பத்தூர் மாவட்டம். ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பகுதியில் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் மேம்பால சுவரின் மீது மோதியுள்ளது,
இதில் நிலைதடுமாறிய பழனி, 50 அடி மேம்பாலத்திலிருந்து கீழே சர்வீஸ் சாலையில் விழுந்துள்ளார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் பழனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இவ்விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
மேலும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் நிலைதடுமாறி 50 அடி உயர மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.