செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றுள்ள போதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடர்ந்து 2 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பியது. 3 தினங்களுக்கு முன்பு செம்பரம்பாக்கம் ஏரியில் முதற்கட்டமாக 500 கனஅடி நீரும், அடுத்தபடியாக ஆயிரம் கனஅடி நீர், பின்னர் 2000 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் நேற்று முதல் மழை சற்று குறைந்ததால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றுள்ளது. இருப்பினும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தொடர்ந்து 2 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இன்று 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டு அதிக அளவு மழை பெய்யக் கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக, தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது செம்பரம்பாக்கம் ஏரியை 20 அடியில் கண்காணிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதன் பிறகு தொடர்ந்து ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தாலும் 23 அடி வரை தேக்கி வைத்து அதன் பிறகு படிப்படியாக உபரி நீரை திறந்துவிட முடிவு செய்திருப்பதாகவும், ஏரியில் இருந்து சீராக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 2015ஆம் ஆண்டு அடையாறு ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு போல் மீண்டும் நிகழாதவாறு செம்பரம்பாக்கம் ஏரி தீவிர கண்காணிப்பில் உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.