Alagiri, Stalin pt desk
தமிழ்நாடு

”இனி எப்போதும் கட்சிக் கட்டுப்பாட்டை மீற மாட்டோம்” - மு.க.அழகிரி ஆதரவாளர்கள் மன்னிப்பு கடிதம்!

தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் முக்கிய ஆதரவாளர்கள் 9 பேர் மீண்டும் கட்சியில் சேர்க்க வலியுறுத்தி கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு மன்னிப்பு கடிதம் அளித்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: பிரசன்னா

மு.க.அழகிரியுடன் நீக்கப்பட்ட 15 நிர்வாகிகள்:

மத்திய அமைச்சராக இருந்து தென் மாவட்ட தி.மு.க-வை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த மு.க.அழகிரி, கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக கடந்த 2014ல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவருடன் அவருக்கு நெருங்கிய ஆதரவாளர்களாக இருந்த அப்போதைய மதுரை மாநகராட்சி துணை மேயர் மன்னன், முன்னாள் அவைத்தலைவர் இசக்கிமுத்து, நகர துணைச் செயலாளர்கள் உதயகுமார், எம்.எல்.ராஜ், முன்னாள் மண்டல தலைவர் கோபி நாதன், தொண்டரணி முபாரக் மந்திரி உட்பட 15 நிர்வாகிகளும் நீக்கப்பட்டனர்.

MK Alagiri

ஸ்டாலினுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்த அழகிரி:

இதையடுத்து கருணாநிதி மறைவுக்குப் பின் ஸ்டாலினுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்த அழகிரி, தமிழகம் முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்களை சந்தித்தார். தனிக்கட்சி துவங்கப் போவதாக கூட தகவல் வெளியானது. ஆனால், சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வெற்றி, ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றது போன்ற அடுத்தடுத்த நிகழ்வுகளால் சமாதானமான அழகிரி தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட 9 பேர் திமுக தலைமைக்கு மன்னிப்பு கடிதம்:

மதுரையில் கட்சியில் கோலோச்சிய அவரது ஆதரவாளர்கள் அனைவரும் 10 ஆண்டுகளாக எந்தக் கட்சிக்கும் தாவாமல் அழகிரியுடன் உள்ளனர். இந்நிலையில் மன்னன், இசக்கிமுத்து உட்பட 9 பேர் தங்களை மீண்டும் கட்சியில் சேர்க்கக் கோரி தற்போதைய மதுரை நகர் தி.மு.க செயலாளர் தளபதி மூலம் கட்சி தலைமைக்கு மன்னிப்பு கடிதம் அளித்துள்ளனர்.

Poster

இனி எப்போதும் கட்சிக் கட்டுப்பாட்டை மீற மாட்டோம்:

அந்தக் கடிதத்தில், ”கழகம், கருணாநிதி என்ற பிடிப்பில் கட்சிக்காக உழைத்தோம். கட்சி அறிவித்த ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றுள்ளோம். திருமங்கலம் இடைத் தேர்தல் உட்பட தென் மாவட்டங்களில் நடந்த தேர்தலில் அழகிரி தலைமையில் பணியாற்றி பல வெற்றிக்கு பாடுபட்டோம். எங்களை தாயுள்ளத்தோடு மன்னித்து மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும். இனி எப்போதும் கட்சிக் கட்டுப்பாட்டை கடுகளவு கூட மீற மாட்டோம்' என தெரிவித்துள்ளனர்.

கருணாநிதியின் கவனத்திற்கு கொண்டு சென்ற அழகிரி:

இதுகுறித்து இசக்கி முத்து கூறியதாவது.. “நான் 1973 முதல் கட்சியில் உள்ளேன். வட்ட செயலாளர், மாநகராட்சி மண்டல தலைவர், கட்சி அவைத் தலைவர் உள்ளிட்ட பதவி, பொறுப்பு வகித்தேன். 2014 ல் கட்சி நிர்வாகிகள் தேர்தல் நடந்தபோது அழகிரி ஆதரவாளர்களான நாங்கள் மனுத்தாக்கல் செய்தபோது எங்கள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இதனால் கோபமுற்ற அழகிரி. இவ்விஷயத்தை கருணாநிதியின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

முக.அழகிரி ஆதரவாளர்கள்

'போட்டிப் பொதுக்குழு நடக்கும்' போஸ்டர் ஒட்டியதால் கட்சிக்குள் சர்ச்சை:

அப்போதைய அமைப்புச் செயலாளரை அழைத்து கடுமையாக அவர் கண்டித்தார். பின் அழகிரி வெளிநாடு சென்றிருந்த நிலையில், மதுரையில் உணர்ச்சிவசப்பட்ட சிலர் 'போட்டிப் பொதுக்குழு நடக்கும்' என ஒட்டிய போஸ்டர் கட்சிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் நீக்கப்பட்டோம். ஆனால், 10 ஆண்டுகளாக வேறு எந்த கட்சிக்கும் செல்லவில்லை. மீண்டும் கட்சியில் சேர அழகிரியும் ஒப்புதல் அளித்து விட்டார். மன்னிப்பு கடிதம் அளித்துள்ளோம். ஸ்டாலினுக்கும் விசுவாசமாக இருப்போம் என்றார்.